மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால் விரக்தியடைந்த ரவீந்திரன் என்கிற ஈழத்தமிழ் ஏதிலியின் சாவுச் செய்தியில் கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை தமிழகத்தில் அரங்கேறிவருகிறது.
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரும் உள்ளார்களா என தினமும் முறைவைத்து பரிசோதிக்கப்படுவது அனைத்து சிறைகளுக்கும் பொதுவான விதியாகும். ஆனால் உயிர் பாதுகாப்புத்தேடி தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களை முகாம்களில் அடைத்துவைத்து இவ்வாறு குற்றவாளிகளைப் போல் கடந்த மூன்று தசாப்தங்களாக கொடுமைப்படுத்தும் அவலம் தாய்த்தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேறிவருகிறது.
ஏதிலிகள் முகாமில் உள்ளவர்களுக்கு மாதக் கொடுப்பனவாக ஒரு தொகை அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அது போக உணவுப்பொருட்களும் குறிக்கப்பட்ட அளவில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்டுவரும் உதவித் தொகையோ, நிவாரணப் பொருட்களோ அவர்களது நாளாந்த குடும்ப இயக்கத்திற்கு போதுமானதாக இல்லை. இருந்த போதிலும் இதையாவது கொடுக்கிறார்களே என்று வாங்கிக்கொண்டிருக்கிறது நாடாண்ட பரம்பரை.
தன்னிறைவு பெற்று சீரும் சிறப்போடும் வாழ்ந்துவந்த ஈழத்தமிழர்கள் வாழ்வில் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் இனவழிப்பு கொடும்போர் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. இனவழிப்பு போர் தமிழர் தாயகத்தை இரத்தக்களறியாக்கிய போது உயிரை பாதுகாக்கும் முனைப்போடு இடப்பெயர்வானது ஈழத்தமிழர் வாழ்வின் ஓரங்கமாகியது.
உள்நாட்டில் இடப்பெயர்வின் எல்லைகள் முடிவடைந்த நிலையில் புலம்பெயர்தல் கட்டாயமாகியது. எட்டிவிடும் தொலைவில் இருக்கும் தாய்வீடான தமிழகம் புலம்பெயர்வின் முகவரியாகியது. நினைத்தவுடன் ஒரு படகை ஏற்பாடு செய்து கடல்கடந்துவிட்டால் சில மணிநேரங்களில் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் படகேறி இறங்கியவர்கள் அக்கரையில் கால்வைத்த மறுநொடியே கொடுஞ்சிறை வாசனை அவர்களை தழுவிக்கொள்கிறது.
காலச்சக்கரம் தன் வலிய கரங்களால் தமிழகத்து புலம்பெயர் வாழ்வின் வலிகளை வரைந்தவாறே கடந்துபோய்க்கொண்டிருகிறது. அதுவே நாளடைவில் பழகிப்போய் அங்கிருந்து செத்துப்போவதைவிட இது பறவாயில்லை என்றானது. தமிழகத்து ஏதிலி வாழ்வின் கொடுமையான அனுபவங்கள் இங்கிருந்து வதைபடுவதை விட சிங்களவன் கையால் செத்துத்தொலையலாம் என்ற விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளது.
அதன் வெளிப்படாகவே தாயகம் திரும்பிச் செல்வோரின் முடிவுகள் அமைந்துள்ளனவே தவிர நல்லாட்சி மீதான மயக்கத்திலல்ல.
உயர் மின் அழுத்த மின்வட கோபுரத்தில் ஏறி சுயநினைவுடன் மின்வடங்களை பற்றிப் பிடித்து தற்கொலை செய்யுமளவிற்கு ரவீந்திரனை விரக்தியின் உச்சத்தில் தள்ளிய அந்த வருவாய் ஆய்வாளரின் செயற்பாடுகள் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை எவராலும் இயல்பாக ஊகித்துவிட முடியும்.
இச்சம்பவம் குறித்து இயக்குநர் புகழேந்தி அண்ணனுடன் கதைத்தபோது, தொலைக்காட்சியில் அந்த காட்சிகளை பார்த்தபோது உடல் நடுங்கிவிட்டது என வேதனையுடன் கூறிய அவர், யாராவது ஒருவர் செத்தால் தான் இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவுவரும் என்ற கையறு நிலையில்தான் இந்த முடிவிற்கு அவர் வந்திருப்பார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சென்றிருந்தேன். உடல் நிலை மிகவும் மோசமாகிய நிலையில் இருந்த செந்தூரனிடம் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்திய போது, ‘அய்யா, யாராவது ஒருவர் செத்தால் தான் இதற்கு ஒரு முடிவுவரும்’ என்று அந்த நிலையிலும் உறுதியாக சொன்னார். அன்று செந்தூரன் எடுத்த முடிவைத்தான் இன்று இவரையும்(ரவீந்திரன்) எடுக்கவைத்துள்ளது என்று கூறினார்.
நிலமை இவ்வாறு இருக்கையில், ‘வீம்புக்கு டவரில் ஏறி உயிர்விட்ட அகதி!’ என்ற தலைப்பிட்டு குமுதம் ரிப்போட்டர் விசமத்துடன் செய்திவெளியிட்டுள்ளது. ‘சமீப காலமாக, பத்துப் பைசாவுக்கு பிரயோசனப்படாத விஷயங்களுக்குக்கூட செல்போன் டவரிலோ, மின்சார டவரிலோ ஏறி, “என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் உயிரை விட்டு விடுவேன்” என மிரட்டும் புதுப்பாணி கடைப்பிடிக்கப்படுகிறது.’ என்ற விசமத்தனமான முன்னுரையுடன் ஆரம்பித்து வருவாய் ஆய்வாளரை மிகவும் நேர்மையானவராகவும் மரணமடைந்த ரவீந்திரனை அடாவடி பேர்வழியாகவும் சித்தரிக்கிறது குமுதம் ரிப்போட்டர்.
இதுவரை தமிழகம் கண்ட தற்கொலை நாடகங்களை அளவீடாக வைத்துக்கொண்டு ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது மேற்கொள்ளப்படும் அதிகார முறைகேடுகளை மூடிமறைக்க முயலும் குமுதம் ரிப்போட்டர் யாரைக் காப்பாற்ற துடிக்கிறது…? இல்லை இவ்வாறு மூடி மறைப்பு செய்வதற்கு யாரிடம் இருந்து எவ்வள பணம் பெற்றுக்கொண்டார்கள்…?
‘வெல்க தமிழ்’ முழக்கத்துடன் வெளிவரும் தினத் தந்தி பத்திரிகை கூட இச்செய்தியை கவனமாக இருட்டடிப்புச் செய்துள்ளது. ஒன்டரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை மூடிமறைத்து விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள், தளபதிகளின் இறப்புச்செய்தியை முதல் பக்கசெய்தியாக்கி தமிழர்களின் கொந்தளிப்பை மடைமாற்றிய வித்தகர்களாச்சே… ‘வீரத் தமிழ் மகன்’ முத்துகுமாரின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தியவர்கள்தானே இவர்கள்.
ரணில்-மைத்திரி நல்லாட்சியில் இலங்கையில் மாரி மழை பொழிகிறது.. ஏரி,குளங்கள் நிறைந்துவிட்டது.. விவசாயம் செழிக்கிறது.. மக்கள் மகிழ்ச்சித் தாண்டவம் ஆடுகிறார்கள்… என்ற ரீதியில் சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தின் கவனிப்பில் கண்ணை மூடிக்கொண்டு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவரும் நிலையில், நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நச்சூட்டப்பட்டுள்ள கொடுமை தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இனிமேல் இப்படியான துயரம் நிகழாது என்ற நிலையை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசிற்கு அழுத்தங்களை கொடுக்காது வழக்கம் போல ஒரு கட்சி தலைவர் பத்து லடசம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும்.. இன்னொருவர் இருபத்தைந்து லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும்.. அறிக்கை விட்டுவிட்டு தனித்தனியே சென்று உடலுக்கு மாலை போட்டுவிட்டு அவர்களின் தேர்தல் பணிகளுக்குள்(!) முகம்புதைத்துவிட்டார்கள்.
இன்னொருவர் உயிரிழப்பில் மீண்டும் சந்திப்போம்.. அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது….. நன்றி.. வணக்கம். இவர்கள் இவ்வாறு சொல்லிச்செல்லாவிட்டாலும் அதுவே நிதர்சனமான உண்மை.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!