ஐ.பி.சி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமைக்காக ஆசிரியர் கி. செல்லத்துரைக்கு டென்மார்க்கின் வீபோ என்ற நகரத்தில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்களாலும், பெற்றோராலும் தமிழ் மக்களாலும் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 20.03.2016 அன்று மாலை 15.00 மணிக்கு டென்மார்க்கில் உள்ள வீபோ நகரத்தில் உள்ள மூன்று எப் விழா மண்டபத்தில் எழுச்சியுடன் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
வீபோ, பியாரிங்போ, காருப் நகரங்களில் வாழும் மக்கள் இணைந்து இந்த விழாவை முன்னெடுத்திருந்தார்கள்.
முதலில் ஆசிரியரின் குடும்பத்தினர் அனைவரும் அழைத்து வரப்பட்டு மலர்ச்செண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அதைத் தொடர்ந்து தொழில் அதிபர் வல்வை ரவிசங்கர் சுகதேவன் தம்பதியர் மங்கள விளக்கேற்ற மாதகல் தம்பிப்பிள்ளையின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இத்தினம் ஐ.நா சபையால் உலக மக்கள் மகிழ்ச்சித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது, உலகின் முதலாவது மகிழ்ச்சிக்குரிய நாடாக டென்மார்க் தேர்வாகியிருந்ததால் இந்த நாள் டென்மார்க்கில் டேனிஸ் மக்களிடையேயும் களைகட்டியிருந்தது.
அதே வழியில் இந்த நாளும் தமிழ் மக்களின் மகிழ்வு நாளாகக் கொண்டாடப்பட்டது, அந்த மகிழ்வின் முத்தாய்ப்பாக ஆசிரியர் கி. செல்லத்துரைக்கான பாராட்டு விழாவாக இத்தினம் ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்வில் இடம் பெற்ற சிறப்புக்கள்:
01. தமது நாட்டில் வாழும் ஒரு தமிழ் மகன் வாழ் நாள் சாதனையாளன் ஆகியிருப்பது தம் அனைவருக்கும் பெருமை தருவதாக மகிழ்ந்து பரிசுகளுடன் பாராட்ட வந்திருப்பதாக அங்கு கூடிய மக்கள் தெரிவித்தார்கள்.
02. ஆசிரியரிடம் கல்விகற்று வைத்தியத்துறை கல்வியை முடித்து டாக்டராக பணியேற்ற மாணவி தனது முதல் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை ஆசிரியருக்கு வழங்கி ஆசீர்வாதம் பெற்றார்.
03. எமது ஆசிரியர் இவர் என்று பெருமையுடன் கூறும்படியாக உங்கள் வாழ்வு சாதனைகள் படைக்கிறது என்று பாராட்டி ஆசிரியரிடம் கற்ற பல்கலைக்கழக மாணவர்கள் தங்கச்சங்கிலி அணிவித்து மகிழ்ந்தார்கள்.
04. வல்வை என்ற ஊரை புகழ்ந்து பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது, சாதனையாளர்கள் பிறந்த ஊரின் மகிமை உலக அரங்கில் பட்டொளி வீசி பறக்கிறது, தனது ஊரின் பெருமையே தன் பெருமையாக வாழும் அவருடைய ஊர்ப்பற்று வல்வையர் அல்லாத மற்றய ஊர் மக்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்று பதியப்பட்டது.
05. தான் மட்டும் வாழாமல் தன்னை வாழ்த்துவோரை வரவேற்பது வல்வையின் பண்பு என்று கூறிய கி.செல்லத்துரை அங்கு வந்த நூறு பேருக்கும் வல்வையின் பரந்த மனத்தோடு பரிசில் வழங்கி ஆதரித்தவனை ஆதரிக்கும் வல்வையின் பண்பு நலன் இதுவென்று கூறினார்.
06. ஒருவன் வாழ் நாள் சாதனையாளனாக வர வல்வை என்ன வகையில் காரணமாக இருக்கிறதென, வல்வை மண்ணின் அனுபவங்களை அங்கு கூடிய மக்களிடையே எடுத்துரைத்தார்.
07. தன்னோடு கற்பித்த திருமதி செல்லம்மா தம்பிப்பிள்ளை, திருமதி சுதாம்பிகை வாமதேவன் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தார்.
பாடல், நடனம், கவிதை, வாழ்த்துரை, விருந்துபசாரம் என்று பல மணி நேரம் நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது…
இத்தருணம் உரையாற்றிய ஆசிரியர் இந்த நிகழ்வு, எனது மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ந்து, நான் பெற்ற வெற்றியை தங்கள் வெற்றியாக கொண்டாடும் ஒரு நிகழ்வு.
ஐ.பி.சி வழங்கிய விருது பெறுமதியானது அந்த நிறுவனம் காலத்தால் பாராட்டப்பட வேண்டிய நிறுவனமாகும், அவர்கள் வழங்கிய பாராட்டு மிகவும் பெறுமதியானது.
ஆனால் யார் விருதுகளை வழங்கினாலும், அது எத்தனை பெரிய விருதாக இருந்தாலும் அந்த விருதைப்பற்றி மக்கள் பேசாதிருந்தால் அதன் பெருமை குன்றிவிடும்.
ஒரு விருதை மதிப்புக்குரிய விருதாக மாற்றுவதுதான் அதை வாங்கியவனுடைய திறமையாகும், என்னிடம் வந்திருப்பதே இந்த விருது பெற்ற பெருமை என்று சென்ற வாரம் நண்பர் ஒருவர் பாராட்டியிருந்தார்.
உயர் மதிப்புக்குரிய கதிரைக்கும் சாதாரண கதிரைக்கும் கால்கள் நான்குதான் ஆனால் அந்தக் கதிரையில் யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் அந்தக் கதிரை பெருமை பெறும்.
அதுபோலத்தான் ஒரு விருது அது வாங்கப்பட்டதன் பின்னர் எத்தகைய அதிர்வலைகளை உருவாக்குகிறதோ அதன் பின்புதான் அதன் பெறுமதி தீர்மானமாகிறது.
இன்று நீங்கள் எடுத்துள்ள விழா இந்த விருதுக்கு டென்மார்க்கில் நடைபெறும் இரண்டாவது பெருவிழா.. இந்தப்பரிசு நம் அனைவருக்கும் பெருமை தருமென நீங்கள் கருதியிருப்பதே இப்பரிசுக்கான சிறப்பு..
நாளைக்கு இந்தப் பரிசை வாங்க வேண்டுமென ஓர் இளைஞன் ஆசைப்பட நீங்கள் வழி சமைக்கிறீர்கள்.. விரல் விட்டு எண்ணுமளவுக்கு சிலர் எதிர்க்கலாம், அப்படி யாராவது எதிர்த்தாலல் அவர்களையும் பாராட்டுகிறேன்.. ஆதரவு மட்டுமல்ல உண்மையில் எதிர்ப்புக்களும் பரிசுகளை செதுக்குகின்றன.
ஆஸ்க்கார் விருதையும், நோபல் பரிசையும், புத்தகங்களுக்கான புக்கர் விருதையும் செதுக்கியது ஆதரவுகள் மட்டுமல்ல எதிர்ப்புகளும்தான்.
ஆதரவாளர் – எதிர்ப்பாளர் – தெரிந்தோர் – தெரியாதோர் – தெரிந்தும் தெரியாதது போல இருப்போர் – பாராட்டுவோர் – பாராட்ட மறுப்போர் என்று அனைவரும் இணைந்தே ஒரு பரிசின் பெறுமதியை தீர்மானிக்கிறார்கள்.
இந்தப் பரிசில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அனைத்து பெரு மக்களையும் வணங்கிப் பாராட்டுகிறேன்.
இதை காலத்தை வென்ற உன்னத பரிசாக மாற்றி நாளைய தலைமுறைக்கு வழங்க பாடுபடு என்று இறைவன் இந்தப் பரிசின் மூலம் எனக்கு கட்டளையிட்டுள்ளான் அந்தக் கடமையைச் சரிவர செய்வேன் என்று அனைவருக்கும் கீழ்ப்படிவுடன் தெரிவிக்கிறேன்.
ஒரு பரிசை ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து பேசும்போதே அது பெறுமதியடைகிறது.. புலம் பெயர் சமுதாயத்தில் அதி உயர் பரிசு என்ற பெருமைய இந்த விருதுக்கு வழங்கி, அதை வழங்கிய ஐ.பி.சி நிறுவனத்தை பெருமைப்படுத்திய உங்களை மனதால் வணங்குகிறேன் என்றார்.