சிங்கள நாட்டில் சிங்கள நீதியரசரைப் பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச.
கொழும்பில் நேற்று தேசிய சுதந்திரமுன்னணியின் பணியகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தமது வரையறைக்கு அப்பால் சென்று நாடாளுமன்றத்துக்கு சவால் விடுத்துள்ளன.
விளக்கமளிப்பதற்காக அரசியலமைப்பில் தமக்குத் தேவையானதை மட்டுமே அவை எடுத்துக் கொண்டுள்ளன.
இதுதானா நீதித்துறையின் நியாயமான செயற்பாடு?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வி.பி ஆகியனவும், அனைத்துலக சமூகமும் தலைமை நீதியரசருக்குப் பின்னால் நின்றுக் கொண்டு செயற்படுகின்றன.
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தவறானது.
நாடாளுமன்றத்துக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கிய அனைத்து நீதிபதிகளையும், அழைத்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அமைய தண்டனை வழங்கப்பட வேண்டும்
விடுதலைப் புலிகளால் பெற்றுக் கொள்ள முடியாததை, தலைமை நீதியரசரின் விவகாரத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.
சிங்கள நாட்டில், சிங்கள நீதியரசரைப் பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார்?
இவ்வாறான பின்னணியை வைத்து பார்த்தால் அனைத்துலக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சூழ்ச்சிகளுடனேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்பது தெளிவாகிறது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.