Search

உண்ணாநிலையைத் தொடரும் தமிழீழச் சொந்தங்களைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆறுதல்

உலக நாடுகளின் துணையோடு முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் இரத்தத்தைக் குடித்து யுத்தவெறியைத் தீர்த்துக்கொண்ட புத்த தேசமான இலங்கையில்கூட தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையாகிக் கொண்டிருக்கிறார்கள்.  தற்போதைய அரசியலைக் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி முள்வேலி முகாம்களுக்குள் பார்வையிட அனுமதிக்கிறார் இராஜபக்சே.
ஆனால் தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களைப் பார்வையிட மட்டுமல்ல, அந்தப் பகுதிகள் பக்கமேகூடச் செல்வதற்குத் தடை விதித்துள்ளது தமிழக அரசு.  இலங்கைப் போரில் அப்பாவித் தமிழர்களைப் பிடித்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு.  அந்த வகையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தற்போது ஈழ நேரு, செல்வராஜ், சவுந்தரராஜன், நந்தகுமார், தவதீபன், ஜான்சன், காண்டீபன், சசிகுமார், ரமேஷ், காந்திமோகன், கஜன், பரமேஸ்வரன், இலங்கைநாதன், மயூரன், சுதர்சன், ஸ்ரீகாந்தன், வேந்தன், பாலகுமார், தர்மசீலன், ஏசுதாசன், ஈசன், தமன், பத்மநாபன் ஆகிய 23 அப்பாவி ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும், கங்காதரன், சயந்தன், சிரஞ்சீவி மாஸ்டர், பகீதரன் ஆகிய 4 ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி சிறப்பு முகாமிலும் எந்த விசாரணையுமின்றி அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ளவர்கள் வானத்தைப் பார்க்குமளவுக்காவது பரந்த விரிந்த இடமாக உள்ளது.  பூந்தமல்லி சிறப்பு முகாமோ மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டு போலவே உள்ளது… வானத்தைக்கூடப் பார்க்க முடியாது.
இக்கொடுமைகளைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த மாதம் வரை சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் இருந்த செந்தூரன் அவர்கள் பூந்தமல்லி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.  இப்படிப் பலர் விடுதலையடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களுடைய ஒற்றைக் கோரிக்கை சிறப்பு முகாமிலிருந்து திறந்தவெளி முகாமுக்கு அதாவது சாதாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்பதுதான்.  ஆனால், தமிழகத்தின் க்யூ பிரிவு போலீசோ தமிழக அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்து இன்னும் அவர்களைத் தீவிரவாதிகளாகவே காட்டிக்கொண்டிருக்கிறது.  அவர்கள் மீது வெடிமருந்து, வெடிகுண்டு வைத்திருந்ததாகச் சொல்லப்படும் வழக்குகள் மட்டுமல்லாது, மோசடி (420) வழக்குகளையும் சுமத்தியுள்ளனர். இதைவிட அதிர்ச்சிகரமான தகவல் கஞ்சா வைத்திருந்ததாகவும் பொய்யான வழக்குகளைப் புனைந்து சிறைப்படுத்தி வருகின்றனர். அடைக்கலம் கேட்டுப் பாதுகாப்புக்காக வருகிற அகதிகளை ஈவிரக்கமில்லாமல் சிறையிலடைத்து அழகுபார்ப்பதுதான் வந்தாரை வாழ வைப்பவர்களின் இலட்சணமா?  தமிழகத்தில் பீகாரிகள், மார்வாரிகள் போன்ற வடநாட்டவர்கள்கூட பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.  ஆனால் தொப்புள்கொடி உறவான தமிழர்கள் தமிழ்நாட்டில் அவல நிலையிலேயே வாழவேண்டிய சூழல்தான் தொடர்கிறது.
இன்று (7-1-2012) 17வது நாளாக உண்ணாநிலையைத் தொடரும் தமிழீழச் சொந்தங்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவரும்படி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசுவுக்குக் கட்டளையிட்டிருந்தார்.   அந்த வகையில், செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழச் சொந்தங்களைச் சந்தித்து, “விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் உங்களோடு நிற்போம்.  தலைவர் திருமாவளவன் அவர்கள் உங்கள் விடுதலைக்காக விரைவில் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார்” என்று நம்பிக்கை அளித்தார்.  தென்சென்னை மாவட்ட செய்தித் தொடர்பாளர் இரத்ன.செந்தில்குமார், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் காஞ்சி மாவட்டச் செயலாளர் தமிழரசன், மாவட்டத் துணைச் செயலாளர் கேது. தென்னவன், செங்கல்பட்டு நகரச் செயலாளர் பிரேம்குமார், காஞ்சி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எழிலரசு உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகளும் தமிழீழச் சொந்தங்களுக்கு ஆறுதல் கூறினர்.Leave a Reply

Your email address will not be published.