Search

பாக்.இராணுவம் தாக்குதல் – இந்திய இராணுவத்தினர் இருவர் பலி!

காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாக்., தூதருக்கு இந்திய மத்திய அரசால் விளக்கம் கோரிய மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இதனிடையே பாகிஸ்தான் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

 

ஜம்மு – காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. இங்கு நேற்று இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாக்., பகுதியிலிருந்து அத்துமீறி நுழைந்த, அந்நாட்டு ராணுவத்தினர் சிலர், இந்திய இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ஹேமராஜ் மற்றும் சுதாகர் சிங் என்ற இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர்;

மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு ராணுவத்தினரின் தலையையும் துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவற்றில், ஒருவரின் தலையை தங்களுடன் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரிகள், இராணுவத்தினரின் தலை துண்டிக்கப்பட்டது தொடர்பாக, எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இரு நாட்டு ராணுவ நடவடிக்கைக்கான டைரக்டர் ஜெனரல்கள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் கடும் எச்சரிக்கை விடப்படும் என கூறப்படுகிறது. மேலும் டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கும் மத்திய அரசால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, பாகிஸ்தானின் செயல் மனிதத்தன்மையற்ற செயல். இந்திய இராணுவத்தினர் மீது கொடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவை கோபமூட்ட செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என கூறினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இந்த செயலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றி பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும். சம்பவம் குறித்து முழு விபரங்களை சேகரித்த பின்னர், இந்தியாவின் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இந்தியாவின் நடவடிக்கை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும் என கூறினார்.

இந்தியா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. கடும் பனிமூட்டம் ஆகியவற்றை சாதகமாக பயன்படுத்தி, இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நடந்துள்ளது என கூறியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *