Search

மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி

மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி

 

சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை
1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம்.

பயிற்…சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார்.

“என்னம்மா செய்யுது என்ன, சாப்பிட்டீங்களம்மா காய்ச்சல் தானே. இப்ப மருந்து
தாறன். காய்ச்சல் உடனேபறந்து பொடும்” என்றார்.

அன்பான அம்மாவாகவும், கனிவான வைத்தியராகவும், நான் அன்று (மகளிர் படையணியின் முதலாவது தளபதியான)மேஜர் சோதியாக்காவைச் சந்தித்தேன்.

பயிற்சிப் பாசறையில இருந்தோரில், நான்உட்பட பெரும்பாலானோர் வயதில் சிறியவர்களாக இருந்தோம். அந்தச் சிறியவர்களுக்கு சோதியாக்கா அம்மாவாக விளங்கினார். நாம் எப்போதும் சோதியாக்காவைச் சுற்றி நின்று அவருக்கு கரைச்சல் கொடுத்துக் கொண்டு நிற்போம். அவரின் மடியில் கூட படுத்திருப்போம். ஒரு நாள்கூட சோதியாக்கா எங்கள் மேல் சினந்து வீழ்ந்தது கிடையாது.

பயிற்சிப் பாசறையில் எமக்கு நீண்ட நேரம பயிற்சிகள் நடக்கும். ஓடுவதில் இருந்து கயிறு ஏறுதல், மலை ஏறுதல் என்றெல்லாம் பயிற்சி நடக்கும். பயிற்சிகள் முடிந்ததும் எங்களது கொட்டில்கள் நோக்கி ஓடிவருவோம். கடுமையான பயிற்சி காரணமாக உடம்பெல்லாம் நோகும். வந்ததும்வராததுமாக கொட்டில்களுக்கு முன்னால் உள்ள ;மரங்களின் கீழ் வீழ்ந்து படுத்துவிடுவோம். சிலர் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தில் நித்திரையாகி விடுவார்கள். இவ்வளவு பயிற்சிகளையும் எங்களுடன் சேர்ந்து எடுத்த சோதியாக்கா படுப்பாரா? இல்லை. அவருக்கு படுப்பதற்கோ, களைப்பாறுவதற்கோ நேரமே கிடையாது. எங்கள் பயிற்சியாளர்களில் காய்ச்சல், கால்நோ, கைநோ, வயிற்றுக்குத்து என்றும், கழுத்து, கால், கை உளுக்கி விட்டது என்றும் படுத்திருப்பவர்களுக்கு ஓடி ஓடி வைத்தியம் செய்வார். நோ உளுக்கு என்றவர்களுக்கு நோ எண்ணெய் போட்டுத் தேய்ப்பார். அதே நேரம் அவரின் நெற்றியால் வியர்வை சிந்தும். தனது கையால் அந்த வியர்வையை வீசி எறிந்துவிட்டு தனது கடமையைத் தொடருவார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கொட்டில் கொட்டிலாகச் சென்று, முதல் வருத்தமென்ற படுத்திருக்கின்ற தோழிகளுக்கு உணவு கொடுத்து, மருந்து கொடுத்து விட்டு விரைந்து வருவார். சோதியாக்காவின் நடை மிகவும் வேகமானது. ஆள் நல்ல உயரம் கால்களும் ;நீளமானவை. கால்களை எப்போதும் எட்டி எட்டி வைத்து வேகமாகத்தான் நடப்பார்.

நான் சோதியாக்காவின் வேகத்தையும் அவர் வியர்வை சிந்திச்சிந்தி தோளில் பயிற்சிக்குரிய மரத்துப்பாக்கியுடன் சக தோழிகளுக்கு செய்யும் சேவையையும் ;பார்த்துவிட்டு எனது தோழி கப்டன் ரஜனியிடம் கூறுவேன். “பாவமடி சோதியாக்கா…” அவளும் “ஓமடி” என்பார்.

உடனடியாக செய்யவேண்டிய முதலுதவிச சிகிச்சைகள் முடிந்ததும் சோதியாக்கா மருத்துவதுக்காக ஒதுக்கப்பட்ட கொட்டிலுக்குள் போவார். அங்கே மருந்து எடுப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். நாங்கள் எல்லோரும் போய்சாப்பிட்டுவிட்டு வருவோம். மருத்துவக் கொட்டிலுக்குள் போய் எட்டிப் பார்ப்போம். சோதியாக்கா மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். “அக்கா வகுப்;பு தொடங்கப் போகுது. நீங்கள் சாப்பிடவில்லையா? போய் சாப்பிடுங்கோ அக்கா” என்போம். “இஞ்சை நிற்கிற இவ்வளவு பேருக்கும் மருந்து குடுத்து விட்டு போறேன்” என்பார். “அப்பா நாங்கள் சாப்பாடு எடுத்து வரவா அக்கா” என்றால் “அடி வாங்காமல் போங்கோ பார்ப்பம்” என்பார். எப்போதுமே சோதியாக்கா தனக்குரிய பணிகளை மற்றவர்களைக் கொண்டு ஒருபோதும் செய்விக்க மாட்டார். நாங்கள் சேதியாக்கா சொன்னதையம் மீறி சாப்பாடு எடுத்து வந்து கொடுப்போம். அந்தச் சாப்பாட்டை சாப்பிட நேரமில்லாது வைத்து மூடிவிட்டு வருவார். சில வேளை நின்றநிலையில் சாப்பிட்டுவிட்டு, வகுப்புக்கு வருவார். எப்போதும் சோதியாக்கா கடைசியாக வகுப்புக்கு வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு, வகுப்பறையில் இருப்பார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட ஆசிரியரிடம் சொல்லிவிட்டு கொட்டில்களில் வருத்தமாக படுத்திருப்பவர்களைச் சென்ற பார்த்துவிட்டு வருவார்.

சோதியாக்கா எங்களுடன் தான் பயிற்சி எடுத்தார். எங்கள் அனைவருக்கும் இருந்த அதேகளை, உடல் அலுப்பு அனைத்தும் அவருக்கும் இருந்ததுதான்.

அப்போதெல்லாம் நாங்கள் சோதியாக்காவைப் பார்த்து “பாவமடி சோதியாக்கா” என்று கதைப்போம். அவ்வளவு தான். அதற்கு மேல் யோசித்துப் பார்க்க எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. இப்போது அந்த சோதி வடிவமான சோதியாக்காவையும் ஓய்வு உறக்கமின்றி அவர் செய்த வேலைகளையும் சேவைகளையும் நினைக்கின்றபோது உண்மையிலே என் கண்கள் தானாகவே நீரைச் சொரிகின்றன. எப்படி சோதயாக்காவால் தன்னை வருத்தி இப்படியெல்லாம் செய்ய முடிந்தது. ஒரு உண்மையான விடுதலை வீரராங்கனை தன்னலமற்றவள் என்பதை எங்கள் சோதியாக்கா தன் வாழ்க்கை மூலம் மெய்ப்பித்துக்காட்டிவிட்டார்.

நாங்கள் தமிழீழத்திற்கு வந்த பின்னர் வன்னிப் பிராந்தியத்தில் ஒரு அடர்ந்த காட்டின் நடுவிலே தளம் அமைத்திருந்தோம். அங்கே எமக்கு ஒரு கிணறு தேவைப்பட்டது. நாங்களே கிணற்றை வெட்டினோம். அந்த நேரம் எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. கஞ்சியையும், ரொட்டியையம் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கிணறு வெட்டினோம். தண்ணீரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் மிகவும் சோர்வடைந்து போன நாங்கள் அந்த கடினமான சூழலில் தொடர்ந்து நின்று பிடிக்கும் வலுவை இழக்கத் தொடங்கினோம். அதன் விளைவாக தெளிவில்லாத கதைகளை கதைத்தோம். இதை அவதானித்த சோதியக்கா, கதைத்த எங்கள்அனைவரையும் கூப்பிட்டு, எங்களின் மனம் தெளிகின்ற அளவுக்கு போராட்டத்தைப் பற்றிய விளக்கம் தந்தார். நாங்கள் Nசுhதியக்காவின் விளக்கத்தினால் புது வேகம் பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் சோதியக்காவோடு சேர்ந்து நின்று கிணற்றைத் தோண்டி தண்ணீரையும் கண்டோம். துள்ளி எழுந்து சோதியக்காவின் தோளில் தொங்கிக்கொண்டு நின்று கூக்குரலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்தோம்.

காட்டில் இருக்கும் காலத்தில் எங்களுக்குரிய உணவுகளை நீண்ட தூரத்தில் இருந்து மூட்டைகளாக தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு வந்து தளத்தில் சேர்த்தோம். மூட்டைகளை சுமந்து வர எல்லோருமே செல்வோம். சோதியக்காவும் எங்களுடன் வருவார். அரிசி, மா, சீனி என்றும் உப்பு, புளி, பருப்பு என்று மூட்டை மூட்டையாகச் சுமந்து வந்தோம். சோதியக்கா எல்லோருடைய தலைகளிலும் பாரங் குறைந்த மூடைகளைத் தூக்கி வைத்துவிடுவார். சோதியக்கா மிகவும் உயரம் என்றதால் எல்லோரும் பொதிகளைத் தூக்கி தலையில் வைக்கச் சோதியக்காவையே அழைப்போம். மிகவும் களைத்தால் வரும் வழியில் மூடைகளை கீழே போட்டுவிட்டு இளைப்பாறுவோம். சோதியக்கா வந்து மீண்டும் தூக்கி விடுவார். தளத்துக்கு வந்ததும் மூட்டைகளை போட்டுவிட்டு ‘கழுத்துக்கை பிடிக்குது, தோள் நோகுது” என்றபடி மரங்களின் கீழ் அமர்ந்து இரண்டு மூன்று பேராக கதைப்போம். சோதியக்கா ஒரு கூழா மரத்தின் கீழ் இருப்பார். சோதியக்காவுக்கு அந்த மரத்தின் அமைதி சரியான விருப்பம். அதனால் அந்த மரத்தின் கீழே தான் வழமையாக இருப்பார்.

ஒருநாள் நானும் கப்டன் ரஜனியும் உப்பு மூடைகள் தூக்கி வந்தோம். இரண்டு பேருக்கும் கழுத்துக்குள் உளுக்கிவிட்டது. விக்கி விக்கி அழத்தொடங்கினோம். எங்களுக்கு எப்போதாவது ஏதாவது துன்பம் என்றால் சோதியக்காவுக்கு அருகில்தான் இருப்போம். அன்றும் அதே மாதிரித்தான் கப்டன் ரஜனி சொன்னார் ‘நாங்கள் துவக்கு எடுத்து ஆமியோடை சண்டை பிடிக்க மட்டும் தான் வந்தனாங்கள், இப்படி மூட்டை தூக்க வேணும், கிணறு வெட்டவேணும் எண்டு தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டோம்” என்றார். அதற்கு நானும் ‘ஓமடி நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தனான்” என்றேன். எங்களின் இந்த உரையாடலை மேலே தொடரவிடாமல் இடை நிறத்தினார் சோதியக்கா. ‘இஞ்ச, நீங்க இரண்டு பேரும் ஆகச் சின்னப் பிள்ளைகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ. போராட்டம் எண்டா கஸ்ரம்தான். முள்ளும், கல்லும் நிறைஞ்ச பாதையில போய்த்தான் நாங்க தமிழீழம் பிடிக்க வேணும்” என்றார். நான் உடனே சொன்னேன் “ஓமக்கா நீங்க சொல்லுறது சரிதான். நாங்க மூடை தூக்கப் போற ஒற்றையடிப் பாதையில காலில குத்துற முள்ளும் கல்லும் எங்களோடையே சேர்ந்து வருது. அதோட பெரிய முள்ளெல்லாம் எங்களை பாவம் பார்த்து போகவேண்டாமெண்டு பிடிச்சு பிடிச்சு இழுக்குதுகள்” என்றேன். உடனே சோதியக்காவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ‘நான் சீரியசாக கதைக்கிறன். நீ பகிடி விடுகிறாய் போ. எனக்கு முன்னால் நிற்காதே” என்றார். ‘இல்லையக்கா இனிமேல் நான் இப்படிப் பகிடிவிடமாட்டேன்” எனக் கெஞ்சிய போது தொடர்ந்து எங்களுக்கு போராட்டத்தைப்பற்றி விளக்கமளித்தார்.

‘உதாரணமாக நாங்கள் வீட்டில் இருக்கிற நேரம் பள்ளிக்கூடத்தில முதலாம் வகுப்பு படிச்சுப் போட்டு திடீரென்று பத்தாம் வகுப்புக்கு போறதில்லை. படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாப் படிச்சு முன்னேறிப் போவம். அதேமாதிரித்தான் எங்கட போராட்டமும். இப்ப நடந்து போய் தலையில மூடை தூக்கிறம். கொஞ்சக் காலத்தில டிராக்டரில கொண்டு வருவம். இப்படியே நாங்கள் வளர்ச்சி அடைஞ்சு எங்கடை தமிழீழத்தை அடைவம். அதற்கிடையில நீங்க குழப்பமான கதைகளை கதைச்சு உங்களை நீங்களே குழப்பாதேங்கோ என்று தொடங்கி ஒரு நீண்ட விளக்கத்தை எனக்கும் ரஜனிக்கும் சோதியக்கா கூறினார். சோதியக்காவின் விளக்கத்தால் நாங்கள் மிகவும் தெளிவடைந்தோம். பின் நானும் ரஜனியும் உணவு மூடைகளை சுமப்பதிலும் கிணறு வெட்டுவதிலும் முன்னுக்கு நின்றோம். இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் சோதியக்காதான்.

முகாமில் இருக்கும்போது, காடுகளில் பாசறை அமைத்து வாழ்ந்தபோது நாங்கள் எங்களுக்குள் ஒருவருடன் ஒருவர் நன்றாகச் சண்டை பிடிப்போம். சண்டை பிடித்தபின் மூன்று நான்கு நாட்களுக்கு கதைக்காமல் ஒருவரை ஒருவர் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்போம். இயக்கத்தில் இணைந்து அப்போது கொஞ்சக் காலந்தான். வீட்டுப் பழக்கங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருந்தன. வீட்டில் தம்பி, தங்கையுடன் குத்துப்பட்டு, கூத்தாடி, சண்டை பிடித்துச் சண்டை பிடித்துப் பழகிப் போனது தானே. இயக்கத்தில் வந்தும் ஒரு கூட்டு வாழ்க்கையைச் சந்திப்போம். இந்த வாழ்க்கையை இதற்கு முன் எப்போதுமே சந்தித்திருக்கவில்லைதானே. வீட்டில் ஐந்து ஆறு பேருடன் இருக்கும்போதே குத்துப்பட்டு சண்டைபிடித்த நாங்கள், நூற்றுக்கணக்கானவர்களுடன் ஒன்றாக இருந்தால் எப்படி இருப்போம்?

சண்டை பிடிப்பவர்களையும், ஒருவரோடொருவர் கதைக்காமல் இருப்பவர்களையம் சோதியக்கா கூப்பிட்டு அறிவுரைகள் கூறிக் கண்டிப்பார். ‘இஞ்ச வாங்கோ இரண்டு பேரும். ஏன் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமல் இருக்கிறியள் இந்தப் பழக்கம் எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு வந்திட்டம். ஒரு இலட்சியத்துக்காகத் தான் எல்லாரும் சேர்ந்திருக்கிறம். இஞ்ச அம்மா, அப்பா பந்த பாசங்கள் எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க தான். ஒருத்தரை ஒருத்தர் தெரியாத நாங்க ஏன் ஒண்டாயிருக்கிறம். எங்கட மண்ணில் இருந்து அன்னியனை துரத்தியடிச்சு எங்கட மண்ணை மீட்டெடுக்கத்தானே” இப்படி தெளிவான விளக்கம் மணிக்கணக்கில் சோதியக்கா தருவார்.

சோதியக்காவின் விளக்கத்தால் தெளிவடையும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமான சிhப்பொன்றை சிரித்துவிட்டு ‘இனிச் சண்டை பிடிக்கமாட்டோம்” எனச் சோதியக்காவிடம் சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் எழுந்து செல்வோம். அந்த மூன்று வருட காலத்தில் நான் சோதியக்காவிடம் நிறையப் படித்துக் கொண்டேன். எங்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். ஷகுழப்படிகள்| என்று கொஞ்சப்பேர் இருந்தோம். இவர்களில் கப்டன் ரஜனி, கப்டன் தமயந்தி, கப்டன் ஆசா, மேஜர் தாரணி, 2ம் லெப் மாலதி என்று பலர் அடங்குவர். இந்தக் குழப்படிகளைத் தனது அன்பான கண்டிப்புக்களாலும் அறிவரைகளாலும் மேஜராக, கப்டனாக, லெப்டினன்டாக வளர்த்து விட்டவரும் வளர்வதற்குக் காரணமாக இருந்தவரும் மேஜர் சோதியக்காதான்.

எங்களின் தாயாக, தாதியாக, ஆசிரியையாக இவ்வளவுக்கும் அப்போது சோதியக்கா சாதாரண ஒரு போராளியாகத்தான் இருந்தார். வழமையாக எங்களுக்கென பொறுப்பாக விடப்படும் போராளிதான் எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுவார். ஆனால்….. எங்களின் சோதியக்கா வித்தியாசமானவர்….

– ரதி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *