பிரதம நீதியரசர்சர் ஷரானி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை இலங்கைப் பாராளுமன்றத்தில் 106 பெரும்பான்மை வாக்குகளால் இன்றிரவு 8.00 மணியளவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 155 வாக்குகள் கிடைத்த அதேவேளையில் 49 பேர் எதிராக வாக்களித்தனர். 20 பேர் வாக்களிக்கவில்லை. இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நீதியரசருக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு நாட்களாக அது தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. இதனையடுத்து இன்றிரவு 7.00 மணியளவில் இதனை வாக்கெடுப்புக்கு விட்டபோது எதிர்க்கட்சியினர் அதனை ஆட்சேபித்தார்கள். இன்றைய நிகழ்ச்சி நிரலில் வாக்கெடுப்பு இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பாராளுமன்றம் கூடிய போது வாக்கெடுப்பை நடத்தலாம் என சபாநாயகர் அறிவித்தார். அந்த நிலையில் பெரும் களேபரத்துக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. 155 பேர் ஆதரவாக வாக்களித்த நிலையில் 49 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தமையால் பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 20 பேர் வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.. அமைச்சர்களான டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் அந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அத்துடன், ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க, எதிரணி உறுப்பினரான ஸ்ரீ ரங்கா ஆகியோர் வாக்களிக்கவில்லை. எனினும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வை.ஜி.பத்மசிறி, அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.