Search

அரசாங்கத்தின் திட்டமிட்ட தொடர் சதியின் உச்சம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடிபொருட்கள்மீட்பு

அரசாங்கத்தின் திட்டமிட்ட தொடர் சதியின் உச்சமாக சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடி பொருள் மீட்பை  அரசாங்க புலனாய்வுப் பிரிவு பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.. இதனை அடுத்து அங்கு அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு வாகனத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனை சிக்க வைப்பதற்கு பல வழிகளில் அரசாங்கம் முயன்று வந்தது. ஈழப் போராட்டத்தை ஆதரத்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்து இந்தியாவில் சிறீதரன் பேசினார் என முதலில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து சிக்க வைக்க முயன்றனர்.

பின்னர் அண்மையில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் குறித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து உள்ளே போட முயன்றனர்.

இவை தவிர அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசினதும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இயங்கும் சில இணையங்களும் சிறீதரனை இலக்கு வைத்து தொடர்ச்சியான சேறடிக்கும் பிரச்சாரங்களை நடத்தி வந்தன.

அதில் குறிப்பாக அண்மையில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தன. கிளிநொச்சியில் 15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருந்தன. எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்பதனை கூட்டமைப்பு உறுதி செய்திருந்தது.

இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அவர்களின் பாதுகாப்பு படைகள் புலனாய்வு கட்டமைப்புகள் இறுதியில் அலுவலகத்தில் வெடிபொருட்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் செய்திகளிற்கு தெரிவித்தார்.

முன்னர் தேர்தல் காலத்தில் தமக்கு ஆதரவாகத் தொழிற்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையான வசந்தன் என்பவர் நீண்டகாலம் தம்முடன் தொடர்பற்று இருந்ததாகவும் திடிரென இன்று அவரை விலங்கிட்டு அழைத்துச் சென்ற புலனாய்வுப் பொலிசார் அவரிடம் இருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் முன்னர் இவர் சிறீதரனுடன் வேலைசெய்ததாகவும் குறிப்பிட்டு அலுவலகத்தை சோதனையிட போவதாக  தெரிவித்தனர்

அதன் பின் அலுவலகத்தை சோதனையிட்டு சமையல் அறையில் சிறு பொதி ஒன்றை மீட்டு உள்ளதுடன் அவரது ஊடகச் செயலாளர் பொன்காந்தன் உள்ளிட்டவர்களை தடுத்து வைத்து விசாரனை செய்வதுடன் வேளமாலிகிதனை வாகனத்துள் வைத்து விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போதும் இலங்கை நேரம் மலை 6 மணிவரை (12.01.13) சிறீதரனின் அலுவலகத்தில் தேடுதல் தொடர்கிறது.

ஏற்கனவே கடந்த பல வாரங்களுக்கு முதல் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி தனது  கிளிநொச்சி அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பொலிஸ்பாதுகாப்பு விலக்கப்பட்டதாக சிறீதரன் தெரிவித்தார்.

இது குறித்து சபாநாயகர், பொலிஸ்மா அதிபர், வடக்கின் பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய கட்டமைப்புகளுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பை மீள வழங்கவில்லை என எமக்கு தெரிவித்த சிறீதரன், தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அலுவலகம் திறந்து செயற்பட்ட 3 வருடங்களாக கொடுக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடிரென காரணம் இன்றி வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தார். அந்த 3 வருடங்கள் அலுவலகத்தில் இல்லாத வெடிபொருள் திடிரென சமையலறைக்குள் இப்போ வந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை வன்னியில் தமது அரசியல் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்காக தவிக்கும் பல அரச சார்பு கட்சிகளுக்கு சிறீதரனின் அரசியல் நடவடிக்கைகள் பெரும் தடையாக இருப்பதாகவும் அதனால் வன்னியில் குறிப்பாக கிளிநொச்சியில் தமது அரசியலை நிலை நிறுத்துவதாயின் சிறீதரனை முடக்க வேண்டும் என பலர் அரசாங்கத்துடன் இணைந்து முழு மூச்சாக தொழிற்பட்டதாகவும் கிளிநொச்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *