Search

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் சொந்தங்களை விடுதலை செய்க: நாம் தமிழர் கட்சி

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் வாழும் தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக்கோரி ஈழத் தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழினப் படுகொலையில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டில் அடைக்கலமாகும் ஈழத் தமிழ் சொந்தங்களில் பலரை, அவர்களை கேவலப்படுத்தும் முகமாக, பிக் பாக்கெட், வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர் சட்டத்தின் கீழும் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் தனிமைச் சிறைக்கூடங்களில் தமிழக காவல்துறையின் கியூ பிரிவினர் தடுத்து வைக்கின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. கியூ பிரிவினரின் கொடுமைகளை தாங்க முடியாத காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. கியூ பிரிவினரின் அராஜகங்கள் பற்றி ஏற்கனவே ஒரு முறை நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோர்  சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகி பிணைய விடுதலை பெற்ற பின்னரும், இப்படி தடுத்து வைத்து சித்தரவதை செய்து வருகிறது கியூ பிரிவு.

மனிதாபிமானமற்ற, மனித உரிமைகளுக்கு எதிரான கியூ பிரிவு காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி பல முறை போராட்டங்களில் ஈடுபட்டு, சிறப்பு முகாம்களை இழுத்து மூடிவிட்டு, அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத் தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக்கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். சிறப்பு முகாம்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படும் செய்தியை நாளிதழ்களுக்குத் தரும் கியூ பிரிவு, புதிதாக கைது செய்யப்பட்டு, சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவோர் தொடர்பான விவரங்களை வெளியிடுவதில்லை. இது தமிழக அரசை திட்டமிட்டு ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

அதுமட்டுமல்ல, சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை விடுதலை செய்கிறோம் என்று உறுதிமொழியை அளித்துள்ளது கியூ பிரிவு. ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. அதன் காரணமாகவே, இப்போது 9 பேர் கடந்த 24 நாட்களாக சாகும் வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், கியூ பிரிவும் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. அதனால்தான் இந்த போராட்டம் 24 நாட்களாக தொடர்கிறது. போராடுபவர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சிபிசிஐடி விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் நம் சொந்தங்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர், அவர்களை தொடர்ந்து மிரட்டி, கொடுமை செய்துவரும் கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இப்பிரச்சனையில் இதற்கு மேலும் விடிவு பிறக்கவில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
Leave a Reply

Your email address will not be published.