தூண்களைத் தகர்க்கும் இராணுவம்!- கந்தரதன்

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் இயற்கையின் கோர அழிவையும் தாங்கும் நிலையில், சிங்களத்தின் கோரத் தாண்டவத்தில்  இருந்து விடுபடமுடியாதவர்களாகவே தற்போது உள்ளனர். அங்கு இராணுவத்தினரின் காட்டாட்சி நிலவுகின்றதை அனைவரும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளனர். வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு அங்கு சமூக சீர்கேடுகளும் ஏன் என்று கேட்க நாதியற்று தாயக மக்களுக்குள்ளே விசம்போன்று ஊடுருவியுள்ளன. நாளும் இணையங்களின் வாயிலாக இவ்வாறான தகவல்களையே நாம் கேட்கும் பாதகமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில், பல்கலைக் கழக மாணவர்களின் விடுதலையை கவனத்தில் கொள்ளாத சிங்களம், பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படாதவிடத்து அதனை நிரந்தரமாகவே மூடிவிடப்போவதாக மிரட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று சிறீலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்க எச்சரித்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டிவரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அவர் பொறுப்பற்ற தன்மையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் அவருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, மாணவர்கள் வருகைதராவிட்டாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமது விரிவுரைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று நடைமுறைக்கு ஒவ்வாதவிதத்தில் எஸ்.பி.திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வெலிக்கந்தை புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை விரிவுரைகளை பகிஸ்கரிப்பது என்ற மாணவர்களின் தீர்மானத்தில் இன்னும் மாற்றங்கள் தென்படவில்லை எனத் தெரியவருகின்றது. மாணவர்கள் தவறு இழைத்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விடுவிக்கவேண்டும் என சிறீலங்கா ஆசிரியர்கள் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை, பல்கலை மாணவர்களை இராணுவத்தினரிடம் மண்டியிடவைக்கும் தலைமைத்துவப் பயிற்சி நடைமுறையும் நின்ற பாடில்லை.  பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்களுக்கு வெளியே வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி விவகாரம் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்டுள்ள இந்த பயிற்சி நாட்டின் கல்வி நிலையங்களை இராணுவ மயமாக்கலின் கீழ் முன்னெடுக்கும் திட்டத்தின் ஓர் அங்கமே என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களை இராணுவத்தைப் போன்று கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யும் நோக்கத்துடனேயே அரசாங்கம் இந்தப் பயிற்சியைக் கொடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில், கடந்த 2012 ஓகஸ்ட் மாதம் வடமாகாணப் பாடசாலைகளில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் ஏற்பாட்டிலேயே வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இரண்டு நாள் மாணவத் தலைமைத்துவ திறன் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியானது  தொடர்ந்து இரண்டு நாள்கள் யாழ். தேசியக் கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றன. இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த கல்வி வலயங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 400 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியை வலய மட்டத்தில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் வடமாகாண கல்வியமைச்சு திட்டமிட்டு வருகின்றது.

ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில் இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதனைப் பார்த்த ஒரு முதியவரின் ஆதங்கம் இது, ‘இப்ப தம்பிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்த பிறகு அதிபர்களுக்கு இராணுவப்பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். அதுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கு.. அதுக்குப் பிறகு பள்ளிப் பிள்ளைகளுக்கு.. அதுக்குப் பிறகு பெற்றோருக்கு..அதுக்குப் பிறகு எங்களுக்குத்தானே..’ இது இவ்வாறிருக்க, பல்கலைக்கழக விவகாரங்களில் அரசாங்கம் இராணுவத்தை தலையிடச் செய்வதாகக் கூறி அதனைக் கண்டித்து சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் கடந்தவாரம் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கை தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். அதன்போது தமது போராட்டம் குறித்து மாணவர்களால் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
தமது போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய மாணவர் சங்கத்தின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை அடுத்து இலங்கை பல்கலைக்கழகங்களை இராணுவ மயப்படுத்த இலங்கை அரசாங்கம் முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் பல்கலைக்கழக மட்டத்தில் இருக்கும் ஜனநாயக நிலைமைகள் பாதிக்கப்படும் என்றும் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தவே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றுக்கெல்லாம் தீர்வு எட்டப்படாத நிலையில், மாணவர்களுக்கு மற்றொரு புதிய பிரச்சினை ஆரம்பித்துள்ளது. அதாவது, வடக்கே பாடசாலைகளில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதற்கென இராணுவத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று தமக்குரிய பாடநேரங்கள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. இராணுவத்தினரை பாடசாலைகளில் கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை என்ன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாடசாலைகளையும் இராணுவ மயமாக்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே தாங்கள் இதனை நோக்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  கூறினார். இலங்கை ஆசிரியர் சேவையின் யாப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் மூலமாகக் கோரியிருக்கின்றது.

அத்துடன், வடக்கில் உள்ள பள்ளிக் கூடங்களில் சிங்கள மொழியை இராணுவத்தினர் கற்பிப்பதன் மூலம் மற்றுமொரு இன அழிப்புக்கு அரசாங்கம் முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தவாரம் திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிக் கூடங்களில், சிங்கள மொழியை இராணுவத்தினர் கற்பிப்பதற்கான அனுமதியை அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் வழங்கியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு வழியிலான போராட்டங்களும் உயிர்த்தியாகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த தலைமுறைகளுக்கு இந்த வரலாறு சென்றடைவதைத் தடுக்கும் வகையில், மிகவும் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசின் இச்செயற்பாடு அரங்கேறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நினைவுத் தூண்களையெல்லாம் தேடித் தேடித் தகர்த்த இராணுவம், எமது சமுதாயத்தின் எதிர்கால மாணவத் தூண்களையும் தகர்க்கத் திட்டமிட்டுள்ளமை வெட்ட வெளிச்சமாகின்றது. உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒருமித்து செயற்படவேண்டிய நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்) நன்றி : ஈழமுரசு

 

 

Leave a Reply

Your email address will not be published.