மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(18.01.2013) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் அனைத்து அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள், என்பவற்றை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
துண்டுப்பிரசுரத்தின் முழு விபரம் வருமாறு
“முழு அடைப்பு போராட்டம்”
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழர்களின் எல்லைக் கிராமங்களான வாகனேரி மற்றும் புணானை பகுதிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 18.01.2013 வெள்ளியன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் அனைத்து அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள், என்பவற்றை புறக்கணித்து போக்குவரத்துச் செய்யாமல் வீட்டில் அமைதியாக இருந்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு தங்களை தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.
“மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம்”
மட்டக்களப்பில் உள்ள வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஓமடியாமடு, கேணிநகர், ஆலங்குளம், புனானை மற்றும் பாரதிபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளையும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி கிராமசேவையாளர் பிரிவையும் ஓட்டமாவடி கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு பொது நிர்வாக அமைச்சும்,சில அரசியல் வாதிகளும் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைவரும் கட்சி பேதமின்றி எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் மேற்படி துண்டுப்பிரசுரங்கள் இன்றைய தினம் மட்டக்களப்பின் பல பாகங்களிலும் வினியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.