தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை

புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்ட இம் மாணவர்கள் ஒன்றரை மாதங்களாக அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையிலே இன்று விடுவிக்கப்பட்டனர் என புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.

குறித்த மாணவர்களின் பெற்றோர்களும், யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி வேல்நம்பி அவர்களும் விடுதலை செய்யப்பட்ட மாணவர்களை அழைத்து வருவதற்காக வெலிகந்தைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்களையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பல்கலைக்கழக இம்மாணவர்கள் நான்கு கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் புனர்வாழ்வுக்காக வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.