லண்டன் : இங்கிலாந்தில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் நோயாளிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் சவுத்தம்டான் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆகியவை மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வறிக்கை, சர்வதேச நர்சிங் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 7 கோடி பேர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அவர்களில் எத்தனை பேர் நிமோனியா, ரத்த உறைதல், சிறுநீரக பை கோளாறு காரணமாக இறந்தனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சைக்கு பின் சரியான கவனிப்பு இல்லாததால் பலர் இறந்துள்ளனர். போதிய டாக்டர்கள், சிறந்த பயிற்சி பெற்ற நர்ஸ்கள் இல்லாததால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் சரியான கண்காணிப்பு இல்லாமல் தொற்று ஏற்பட்டு நோயாளிகள் பலர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அப்படி இறந்த பலருடைய தொற்று நோய்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்திருந்தால், அவர்கள் பிழைத்திருப்பார்கள். இதுபோல் டாக்டர்கள், நர்ஸ்கள் கண்காணிப்பு இல்லாமல், ஆண்டுதோறும் 28 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்பது தெரிகிறது. டாக்டர்கள் பற்றாக்குறையால் 9 சதவீத நோயாளிகளும் நர்ஸ்கள் பற்றாக்குறையால் 8 சதவீத நோயாளிகளும் இறக்கின்றனர்.

மருத்துவமனை வார்டுகளில் பயிற்சி இல்லாத சுகாதார துறை ஊழியர்கள் பணியாற்றுவதால், 10 சதவீத நோயாளிகள் இறக்கின்றனர். மருத்துவமனையில் சிறந்த கண்காணிப்பு இருந்தால், பின்விளைவுகள் குறைவாக இருக்கும். பொருளாதார நெருக்கடியால் பல மருத்துவமனைகள் நர்ஸ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில்லை. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5,964 நர்ஸ்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த 2 ஆண்டுகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பல பிரிவுகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இன்னும் உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *