ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில், தமிழ்நாட்டைத் தவிர்த்து வேறு மாநிலங்களில் இலங்கை ராணுவத்திற்குத் தொடர்ந்து பயிற்சி கொடுப்போம் என்று இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியிருக்கிறார்.
இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைச் சிங்கள ராஜபக்சே அரசு நடத்தியதில் கூட்டுக் குற்றவாளி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். திட்டமிட்டே இந்தத் துரோகத்தை இந்திய அரசு செய்தது. தமிழர்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த சிங்கள அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குத் திரும்பத் திரும்ப அழைத்து வந்து சிவப்புக் கம்பள வரவேற்பையும் கொடுத்தது.
தமிழர்கள் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிப்பதுபோல், சிங்கள விமானப்படைக்குத் தாம்பரத்தில் பயிற்சியும், ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி, வெலிங்டனில் பயிற்சியும் கொடுத்தது. தமிழ் ஈழத்தில் இன்றும் சிங்கள ராணுவம் கொடுமை செய்து வருகிறது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.
இத்தனைக்குப் பிறகும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்போம் என்று அந்தோணி பேசுகிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட குரல் அல்ல. சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமை தாங்கும் அரசின் கொக்கரிக்கும் ஓங்காரக் குரல். இதன் மூலம் மத்திய அரசின் துரோக முகம் மேலும் அம்பலப்படுகிறது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.