(1) வரலாற்றில் வல்லிபுரம்
***************************
“…….கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி ‘மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ’ என்று கெஞ்சினாள்…..
அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான். அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. ‘எவ்வளவு சனம் பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப் போறது’ என்று சொல்லிக் கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள்……
கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ்டப்படி கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிரகத்தில் மணிச்சத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன. செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் – அதுதானோ வல்லிபுரப்பெருமாள்?….
வெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தையும், வைரத்தையும் பொடியாக்கிச் சிதறி விட்டது போன்ற அந்தஅகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்புவெள்ளம் பாய்வது போல நிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச்சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்….
சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால்அடித்து ஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒருகைவிளக்கின் அருகில் உட்கார்ந்து, பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக் கண்ணால் பார்த்தபடி ‘ஒண்டுக்குநாலு’க்காரன், ‘ஓடிவா ஓடிவா – போனல் கடலைக் காசு, வந்தால் தேத்தண்ணிக்காசு’ என்று ஓலமிட்டான்….
வெண்மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றிவந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப் பெட்டி வாங்கவில்லை….
..மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக் கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்கரங்கள் ‘கடக், கடக்’ என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடியபனைமரங்கள் மௌனப் பூதங்கள் போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன.
..மாடு களைப்பினால் பலமாக மூச்சு வாங்கியது. நெல்லியடிச் சந்தியில், ஒருபூவரச மரத்தின் கீழ் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடுயாமத்திலும் கோவிலுக்குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம் திறந்து வைக்கப் பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் ‘கட கட’ என்ற சத்தத்தை விட, மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈழத்தின் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியான இலங்கையர்கோன் அவர்கள் 1944இல் எழுதிய “வெள்ளிப்பாதசரம்” எனும் சிறுகதையில் வரும் வல்லிபுரக்கோவில் திருவிழா சூழல் தொடர்பான விபரணமே மேலே உள்ளது. இளம் தம்பதியொன்றின் அழகிய காதலை இக்கதை உயிரோட்டமாக படம்பிடிக்கிறது.
நான் அறிவுதெரிந்த நாளிலிருந்து வல்லிபுரக்கோவிலையும் அதன் சூழலையும் ஆழமாக நேசிக்கிறேன். ஆளரவமற்ற வெறும் கோவில் சூழல், ஓரளவு சனத்துடனான ஞாயிற்றுக்கிழமை, மார்கழி மாத “தோய்ச்சல்” பூசைக்கு போகும் இதமான விடியற்சாம ம், மார்கழி பனிக்குளிரை முறித்தெறிந்து குருக்கட்டு பிள்ளையார் கோவில் கேணியில் முழுகிச் சிலிர்த்த விடியல்கள், இரவு நிகழ்ச்சிகள் இடம்பெறும் குறும்புத்தனமான இரவுகள், பொங்கல் மடத்தில் பொங்கிப் பகிர்ந்துண்ட பகல்கள், திருவிழா கால மாலைப் பொழுதுகள், சன நெரிசல்கள் என எல்லா தருணங்களுக்குள்ளும் நான் கரைந்திருக்கிறேன்.
மூச்சை இறுக்கும் சன நெரிசலில் கற்பூர தீப ஒளியில் தெரியும் மாயவனை காண தபசிருந்துள்ளேன். இளங்காலை வேளையில் ‘சேட்” டும் போடாமல் மெல்லிய வியர்வை மேலில் படர வடக்கு வீதியால் காற்றை எதிர்த்து நடந்த நினைவுகளில் இப்போதும் நனைகிறேன். சின்ன வயதில் வல்லிபுரக் கோவிலால் வீட்டுக்கு வரும்போது சனம் நேர்த்திக்காக வைத்த “வெள்ளிப் பாம்புகளையும்” பை நிறைய “நாம” களிமண்ணையும் அள்ளிவந்துள்ளேன். கோவிலுள் இருந்த ஒவ்வொரு சாமி சிலையிடமும் ஒவ்வொரு வேண்டுதலை எப்போதும் மாறாது கேட்டிருக்கிறேன். கல்வியைத் தா, வீட்டு கஸ்ரம் இல்லாது போக வேணும், மாடு வளர்க்க வேணும்,, பின்னர் வயது வந்தபோது காதலை சேர்த்து வை எனப் பல. திருவிழா கால “கொத்திறாவட்டி சந்தி” தண்ணீர் பந்தலில் மோர்த் தண்ணியும், சக்கரைத் தண்ணியும் வாங்கி குடித்தும் போத்தல்களில் வீட்டிற்கும் கொண்டுபோயுள்ளேன். ஐஸ் கிறீம் கடைகளுள் வெள்ளிக் கோப்பைகளில் “ஸ்பெசல்” அருந்திய மேல்த்தட்டு மக்களை பார்த்து ஒரு ஐஸ் குச்சியோடு சேர்ந்தே உருகிய வறிய பொழுதுகள் அவை. வல்லிபுர கோவில் மூலமூர்த்தியான சக்கரம் ஏதோவொரு நம்பிக்கையை தந்தது. தேரிலன்று அங்கப்பிரதஷ்டை அடிக்குமளவுக்கு பக்தியின் பொற்காலம்.
நாங்கள் A/L படித்த காலங்களில் நிகழ்ந்த திருவிழாக்களின் நினைவுகள் பல வண்ணங்களின் சிதறலாய் தித்திக்கிறது. கோவிலின் இருமருங்கிலும் திரண்டிருக்கும் சனக்கூட்டத்துக்குள் ஒரு சப்பற திருவிழாவிலோ, தேரிலன்றோ, கடல் தீர்த்தத்தில் அன்றோ நாங்கள் விரும்பியவர்களை காண, திருவிழாவில் தொலைந்த குழந்தையின் ஏக்கத்தோடு அலைந்திருக்கிறோம். தேடி அலைந்த திரவியத்தை கண்ட கணத்தில் ஐம்புலனும் அடங்கி, கண்ணனின் குழலோசை கேட்ட பசுக்களைப் போல மெய்மறந்து நின்றுள்ளோம். திருவிழாக்களின் நாயகன் என மனசுக்குள் இரகசியமாக சொல்லிக்கொண்டலைந்த காலமது.
பின்னர் ஒரு காலத்தில் திருவிழா நேரம் கோவிலுக்குள் போகாமல் இரவு நேரத்தில் மோட்டச்சைக்கிளில் பெடியளாக போய் “ஸ்பெசலும்”, சுடச்சுட வீச்சு றொட்டியும் சாம்பாரும் என சாப்பிட்டோம். மணல் வெளியில் பரவும் நிலா ஒளியில், விழா கால வீதிகளை நிறைக்கும் “ரியூப் பல்ப்” வெளிச்சத்தில் கூடிக் கூடி கதைத்து மகிழ்ந்தோம். காலப் பெருவெள்ளத்தில் இப்போது ஒவ்வொருவரும் வேறுவேறான திசைகளில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டோம். வல்லிபுர கோவிலை நினைக்கும் போதெல்லாம் பலர் நினைவில் வருகின்றனர். “சேனாதி” என எல்லோராலும் அழைக்கப்பட்ட கோவிலடியில் இருந்த “விசர்” மனுசன், தேத்தண்ணிக் கடை தாடியர், பட்டாளம் செல்லத்துரை அண்ணை, கைப் படம் வைத்திருந்த இரு சாத்திரிமார், தோசை சுடும் வல்லிபுர குறிச்சி மனுசிகள், கச்சான்காரி, கற்பூரம் விற்கும் மனுசன், பறை மேளமடித்தவர், சாமி தூக்கும் கற்கோவள நண்பர்கள், சனங்களை அடக்கி மணியகார வேலைபார்க்கும் சில கோமாளிகள், ஒரு சில பிச்சைக்கார்ர்கள், ஐயர்மார் என பலர்.
இப்போது கடவுள்-பக்தன் உறவில் நம்பிக்கையில்லை. வரங்களும் சாபங்களும் தம் கவர்ச்சியை இழந்துவிட்டன. மனிதனின் மிக உயர்ந்த அழகியல் கண்டுபிடிப்பே கடவுள் என எண்ணத்தோன்றுகிறது. கடவுளை நம்பவைக்க புனையப்பட்ட கோட்பாடுகள் சமூகத்தின் வர்க்க பேத த்தை நிலைநிறுத்தின என தெளிவுபெற முடியும். இவை என் அனுபவத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டவை. தற்போது வல்லிபுர கோவில் தொடர்பான எனது பெருமையெல்லாம் அது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தமிழ் குடியின் மடியில் அமைந்திருக்கிறது என்பது மட்டுமே. வல்லிபுரம் என்பது தென்னாசியாவிலேயே நீண்ட கடலோரத்தைக்கொண்ட துறைமுக நகரமாக வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பன்னெடுங்காலம் இருந்திருக்கிறது. புராதன யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகரமான ” சிங்கை நகர்” என்பது இதுவே. இதனையே கி.பி 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த “கோட்டகம”(கேகாலை) தமிழ் கல்வெட்டு ” பொங்கொலி நீர்ச் சிங்கைநகர்” என குறிப்பிடுகிறது. அதாவது பரந்த கடலையுடைய வல்லிபுரமே அது என சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இன்னும் ஓரிரு பதிவுகளூடாக வல்லிபுர மணல் மேடுகளுக்குள்ளும் வரண்ட சிறு பற்றை காடுகள் மண்டிய பகுதிகளுக்குள்ளும் மறைந்திருக்கும் தமிழரின் மேன்மைகொள் வரலாற்றை பல அறிஞர்களது ஆய்வுகளூடாக பார்க்க ஆசைப்படுகிறேன். அத்தோடு வல்லிபுர கோவில் தொடர்பான வரலாற்றினையும் இணைத்து ஒப்பாயலாம்.
இதனை எழுத நான் விரும்பியபோது அதற்கு அவசியமான புத்தகங்களையும் புகைப்படங்களையும் அனுப்பி உதவும் தம்பி கோபி, தம்பி மோகனகிருஷ்ணன் ஆகியோருக்கும் சில அரிதான புகைப்படங்களையும் கோவில் தொடர்பான நூல்களையும் தந்துதவிய மதிப்பிற்குரிய என் ஆசான் திரு. கருணாமூர்த்தி ஆசிரியர் ஆகியோருக்கு முதல் நன்றிகள்!
# விமலேந்திரன் பாரதிதாஸ்