சென்னை : தமிழக அரசு தலைமை செயலகத்தை கோட்டைக்கு மாற்றியது செல்லும்; புதிய கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றலாம் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. திமுக ஆட்சியில் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மிகப்பெரிய அளவில் நவீன வசதிகளுடன் புதிய தலைமை செயலக வளாகம் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோட்டைக்கு மீண்டும் தலைமை செயலகத்தை மாற்றியது.
ஏற்கனவே இருந்த பேரவை அரங்கிலேயே பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் புதிய தலைமை செயலகம் அனைத்து வசதிகளும் அடங்கிய நவீன மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, புதிய தலைமை செயலகத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றத் தடை விதிக்க கோரியும் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரியும் வக்கீல் வீரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.என்.பாஷா, பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விடுதலை, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ், அரசு சிறப்பு வக்கீல் சம்பத்குமார் மற்றும் இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக தாக்கல் செய்த வக்கீல் ஜெ.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். பல மாதங்களாக நடந்த இந்த வழக்கில் வாதங்கள் முடிந்து ஜனவரி 7ம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றும் முடிவை தமிழக அரசு விதிமுறைகளுக்கு முரணாகவோ அவசரகதியிலோ எடுக்கவில்லை. அவசர அவசரமாக முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெருமளவில் சேவை செய்ய வாய்ப்பு ஏற்படும் என்று அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளால் சென்னையில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. ஏழை மக்களுக்கும், பின்தங்கிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க அந்த மருத்துவனைகள் போதுமானதாக இல்லை. எனவே, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமை செயலகத்தின் ஏ பிளாக் கட்டிடத்தை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்றுவதில் மாற்றுக்கருத்து எழவில்லை.
இந்த நாள்வரை புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் அரசு மருத்துவமனை இல்லை என்பதுதான் உண்மை. சிறுநீரகம், இதயம், கல்லீரல் நோய்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை தருவதை அரசு கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான செலவு மிகவும் அதிகம் இருப்பதால் அந்த செலவை ஏழை மக்களாலும் நடுத்தர மக்களாலும் தாங்க முடியாது.
எனவே, புதிய தலைமை செயலக வளாகத்தில் உள்ள ஏ பிளாக்கில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது பொது நலன் கருதிதான் என்பது விளங்குகிறது. இந்த மல்டி ஸ்பெ ஷாலிட்டி மருத்துவமனையை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து தமிழக சட்டப் பேரவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
தமிழக அரசின் இந்த கொள்கை முடிவு அவசர அவசரமாக எடுக்கப்படவில்லை என்றும் தேவையற்ற முடிவு இல்லை என்றும் அரசு தரப்பில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு ஏழை மக்களின் நன்மைக்காக அவர்களுக்கு சிறந்த தரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைவரும் பார்க்கும் வகையில் அண்ணாசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமை செய லகத்தை மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையாக மாற்ற தடை விதிக்க கோரிய மனு ஏற்கனவே நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோரால் 2011 செப்டம்பர் 14ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
குறிப்பிட்ட கட்டிடத்தைத்தான் மருத்துவமனையாக பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். மேலும், தமிழக அரசின் முடிவையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்த வழக்கில் உரிய முகாந்திரம் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. புதிய தலைமை செயலகத்தை, கோட்டைக்கு மாற்றியது செல்லும்; மேலும், புதிய கட்டிடத்தை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றலாம். அது தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.