சிங்கள மயமாகி வருகிறது முல்லைத்தீவு !

முல்லைத்தீவு – நாயாறு பிரதேசத்தில் மேலும் ஒருதொகுதி தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், இப்பிரதேசத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் செயற்றிட்டங்கள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில், மாவட்டக் கடற்றொழிலாளர் சமாசமும், இராணு வத்தினரும் இணைந்து நடத்திய கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக பிரதேச மக்களின் கடுமையான எதிர்ப்புக்கும் மத்தியில் 38 தென்னிலங்கை மீனவர்கள் நாயாறு பிரதேச கரையோரத்தில் தங்கிக்கொண்டனர்.

ஆரம்பத்தில் 38 மீனவர்களே தொழிலுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டபோதும், இத்தொகை படிப்படியாக அதிகரித்து சுமார் 160 வரையான சிங்கள் மீனவர்கள் தற்போது இந்தப்பகுதியில் நிரந்தரமாக தங்கியிருந்து கடற்றொழில் செய்து வருகின்றனர்.

இதனை கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த போது ஆதாரங்களுடன் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்போது அனுமதியின்றி தங்கியிருக்கும் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும், சட்டவிரோதமான கடற்றொழில் முறைகளை கையாள்வோரை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அமைச்சர் பணித்திருந்தார்.

ஆனால் அமைச்சரின் உத்தரவுகள் எவையும் நடைமுறைப் படுத்தப்பட வில்லை.மேலும் மாவட்டக் கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களத்திற்கு ஆளணி பற்றாக்குறையிருப்பதாலேயே அமைச்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியவில்லை என அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே தங்கியிருக்கும் 160 இற்கும் மேற்பட்ட தென்னிலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மேலதிகமாக தற்போது 50வரையான தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அப்பகுதிக்கு வந்து தங்கியிருப்பதாகவும், அதற்கான அனுமதியினை கடற்றொழிலாளர் சமாசம் வழங்கியிருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுகின்றது.

இதனால் நாயாறு மற்றும் அதனை அண்டியுள்ள மிகக்குறைந்தளவு வளங்களைக் கொண்டுள்ள பிரதேச கடற்றொழிலாளர்கள், மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இதேபோல் கடற்றொழிலுக்காக வரும் சிங்கள மீனவர்கள் அந்தந்தப் பகுதிகளில் இருப்பிடங்களை அமைத்தக் கொண்டு தங்கியிருப்பதாகவும், சிலர் தங்களது குடும்பங்களுடன் வந்து தங்கியிருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தினுள் ஏற்கனவே வெலிஓயா என்ற சிங்கள மக்களைக் கொண்ட தனியான பிரதேச செயலர் பிரிவொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது கடற்றொழிலுக்கான அனுமதியும் ஒரு திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கையாக அமையலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு பிரதேசத்திற்குள் வந்து கடற்றொழில் செய்யும்போது அந்தப்பிரதேச மீனவ ர்களின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என கடற்றொழில் அமைச்சு கூறிவருகின்றது, உதாரணத்திற்கு யாழ்.வடமராட்சி கிழக்கில் அத்துமீறி நுழைந்த தென்னிலங்கை மீனவர்கள் அந்த பிரதேச கடற்றொழிலாளர்களின் ஒப்புதல் இன்மையால் திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த நடைமுறைகள் எந்த இடத்திலும் பின்ப ற்றப்படவில்லை எனவும் அந்த மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.