ஏமனில் அல்-காய்தா No. 2 தலைவர் மரணமடைந்தார் என்ற தகவல் இன்று ஏமன் அரசு செய்தி ஏஜென்சியால் வெளியிடப்பட்டுள்ளது. ஏமன் அரசு செய்தி ஏஜென்சி ‘SABA’ இன்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்க உளவு விமானம் ஏவிய ஏவுகணையால் ஏற்பட்ட காயங்களே, இவரது மரணத்துக்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சையத் அல்-ஷிஹிரி என்ற பெயருடைய இவர், ஏமன் அல்-காய்தாவின் No. 2 தலைவராக இருந்தவர். பின் லேடன் போலவே இவரும் சவுதி அரேபிய நாட்டு பிரஜை. இவர் ஏமன் நாட்டின் தெற்கு நகரம் சாடாவில் மறைவிடத்தில் இருந்தபோது, இவர்மீது உளவு விமானத் தாக்குதல் நடைபெற்றது. அதில் இவரது மெய்ப்பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட போதிலும் படு காயமடைந்து உயிர் தப்பியிருந்தார் இவர்.
அல்-காய்தா வட்டாரங்களில், அபு சாஃயான் அல-அஸ்டி என அறியப்பட்டவர் இவர்தான். நாம் குறிப்பிட்டிருந்த சையத் அல்-ஷிஹிரி என்பது இவரது நிஜப் பெயர்.
கடந்த செப்டெம்பர் 10-ம் தேதி இவர் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஹதராமாவ்த் மாகாணத்தில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக, ஏமன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதன் பின் செய்யப்பட்ட DNA சோதனையின்போது, கொல்லப்பட்ட நபர் இவரல்ல என்று தெரியவந்தது.
அதன்பின், கடந்த அக்டோபர் 22-ம் தேதி, பல ஜிகாதி வெப்சைட்டுகளில், தாம் உயிருடன் இருப்பதாக சொந்தக் குரலில் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டார் சையத் அல்-ஷிஹிரி. “என்னுடைய மரணம் பற்றி வந்த வதந்திகளை நம்பாதீர்கள். ஒரு புனிதப் போராளியை அமெரிக்காவால் ஏவுகணை ஏவி அழிக்க முடியாது” என்பது, அவரது ஆடியோ மெசேஜ்.
தற்போது இவர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஏமன் அரசு செய்தி ஏஜென்சி கூறுகிறது. ஏவுகணை தாக்குதலில் காயமடைந்து இருந்த இவர், எப்போது மரணமடைந்தார் என்று அறிவிக்கப்படவில்லை.