Search

போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்கள் காணாமல் போனது உண்மையே – வாசுதேவ நாணயக்கார

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ள நிலையிலேயே வாசுதேவ நாணக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
ஏனென்றால் உள்நாட்டு யுத்தமும் அதன் பின்னரான செயற்பாடுகளும் முக்கியமானவை அத்துடன் அவ்வறிக்கையில் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக காணாமல் போனவர்களின் விபரங்கள், உறவினர்களின் சாட்சியங்களின் அடிப்படையில்  நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பதிவாகியுள்ளது.
இதில் யார் கூட்டிச் சென்றது? எப்போது சம்பவம் இடம்பெற்றது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை பொய் எனக் கூறக்கூடாது. நியாயமான சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும்.
இல்லையென்றால் மீண்டும் பிரச்சினைகள் மேலோங்கி நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *