
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் ஜேர்மனிக்குப் பயணமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“இலங்கையில் தற்போது காட்டாட்சி நடக்கின்றது. நீதித்துறை செத்துவிட்டது. மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இதனால் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் படையினர், புலானாய்வுப் பிரிவினர், ஒட்டுக்குழுக்கள் ஆகியோரால் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்; தாக்கப்படுகின்றனர்; கைதுசெய்யப்படுகின்றனர்; கடத்தப்படுகின்றனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. வடக்கில் கடந்த 50 நாள்களுக்குள் கைதுசெய்யப்பட்ட 44 பேர் பூஸா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள் எவரையும் அரசு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை.
அதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஆகியோர் வெலிக்கந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் மஹிந்த அரசின் உத்தரவுக்கமைய படையினரால் அபகரிக்கப்பட்டுவருகின்றன. தாம் நினைத்ததை இந்த அரசு செய்து முடிக்கின்றது; தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற ஆணவத்துடன் செயற்படுகின்றது.
அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம் பற்றிப் பேசுவதில் மஹிந்த அரசு பின்னிற்கின்றது. தமிழ்க் கூட்டமைப்பின் கருத்துகளுக்கு இந்த அரசு செவிசாய்க்குதில்லை.
எனவே, அரசியல் தீர்வு விடயத்தில் மஹிந்த அரசு காட்டும் இழுத்தடிப்பு, வடக்கு, கிழக்கில் படையினரின் அராஜகங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு எதிர்வரும் தினங்களில் தமிழ்க் கூட்டமைப்பினராகிய நாம் எடுத்துரைக்கவுள்ளோம்.
சர்வதேச நாடுகளுக்கு விஜயம் செய்யும் நாம் அந்நாட்டு உயர் அதிகாரிகளிடம், ”சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக ஒரு தீர்வைப்பெற தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, இலங்கை அரசுக்கு தாங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்” என்பதைக் கூறவுள்ளோம். ஏனெனில், மஹிந்த அரசை நம்பி நாம் இனிப் பேச்சுக்கு செல்லமாட்டோம்.
இலங்கையில் நடக்கும் காட்டாட்சியால் பொதுநலவாய மாநாடு இவ்வருடம் கொழும்பில் நடப்பது கேள்விக்குறி யாகியுள்ளது. அத்துடன், மார்ச் மாதம் ஜெனிவாவிலும் மஹிந்த அரசுக்குப் பாரிய தலையிடி காத்திருக்கின்றது” என்று தெரிவித்தார் சுரேஷ்.