Search

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை அடுத்த மாத நடுப்பகுதியில் ஐநா வில் வெளியிடப்படும்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முதலாவது அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் ஐநா பொதுச்செயலாளர் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையென்ற ரீதியில் அறிக்கையொன்று வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் மீள் மதிப்பீடாக இந்த அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அது எதிர்வரும் வாரங்களில் இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மனித உரிமை தொடர்பான ஆணையாளரின் அறிக்கையாகவே இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டபடி நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்த இலங்கை அரசு தவறிவிட்டதாகவும் இது குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்தவென தயாரிக்கப்பட்ட செயற்திட்டத்தையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றன.

முறையான சட்ட ரீதியான முறையில் கொண்டு வரப்படாத குற்றப்பிரேரணை மற்றும் பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்கவை வெளியேற்றியதன் மூலம் நாட்டின் சட்டத்துறை நிர்வாகம் சீர்குலைந்துள்ள நிலையில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஐநா சபையின் இயந்திரமொன்றை நிறுவ வேண்டுமென்று ஐநா வலியுறுத்தலாமென்றும் தெரியவருகின்றது.

இந்த அறிக்கை இலங்கையின் கௌரவத்தை சர்வதேச ரீதியில் பாதிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

இந்த அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி முதல் மார்ச் 22ம் திகதி வரை நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் 22வது அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் சீனா, கியூபா ஆகிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இவ்வருடம் முதல் செயற்படவில்லை. பாகிஸ்தான் மட்டுமே இலங்கைக்கு ஆதரவான நாடாகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *