யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு முன்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதென பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தாலும், ஏராளமான மக்கள் காணாமல் போன தங்கள் உறவுகளை இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் உண்மை அமெரிக்காவுக்குத் தெரியும் என அமெரிக்க துணை இராஜங்க செயலாளர் ஜேம்ஸ் மூர் யாழில் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். ஆயர் இல்லத்தில் ஆயரை சந்தித்த மேற்படிக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகள், இராணுவ நெருக்கு வாரங்கள், மீள்குடியேற்ற நிலமைகள், மக்களுடைய நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது யுத்தம் நிறைவடைந்து பல அபிவிருத்திகள் இங்கு மேற்கொள்ளப்பட்டாலும், தமிழர்கள் விரும்பும் வகையில், சுதந்திரமான நடமாட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் இராணுவக் குறைப்பு இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழர்கள் சுதந்திரமற்ற ஒரு இனமாகவே வாழ்கின்றனர் என ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அமெரிக்க துணை இராஜங்கச் செயலாளர் தலைமையிலான குழுவினர் தாம் இதுகுறித்து அறிந்திருப்பதாகவும், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இங்கிருந்த நிலைமை தற்போது இல்லாமையினை நாம் நேரடியாகவே அவதானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சர் காணாமல் போனவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியாது, எனக் கூறியிருந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் மக்கள் சுட்டிக்காட்டியிருப்பதுடன் எமக்கும் அந்த விடயத்தை மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் என குறிப்பிட்டனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் தாம் ஆழ்ந்த கவனத்தை தொடர்ந்தும் செலுத்தி வருவதாக கூறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நேற்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் தாம் நிறைய விடயங்கள அறிந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
2ம் இணைப்பு
பாராளுமன்றத்தில் இருக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று அரசாங்கம் எண்ணி பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது இவ்வாறான செயற்பாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அமெரிக்க இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்கு இன்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் ஆயர் இல்லத்தில் சந்தித்து இங்குள்ள நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இக் கலந்துரையாடலின் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதியில் காணமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. இருந்தபோதும் காணமல் போனவர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது குறித்த தவறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
இங்கு இப்போதும் காணமல் போனவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எண்ணி கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கின்றார்கள் என்றார்.
அத்துடன் வடபகுதியில் வாழும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதோடு தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதுதான அடக்குமுறையும் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்துவமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறதே தவிர அதற்கான சமிக்கைகள் எதுவும் இல்லை.
அரசாங்கம் பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் இருக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று எண்ணிக்கொள்கிறது.
இதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்கின்ற போது அது நன்மை பயக்கக் கூடியாகதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.