1896ம் ஆண்டில் கு. சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஆலடியில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உரிய காணியில் தொடங்கிய ஆங்கிலப்பாடசாலை சிதம்பரக்கல்லூரி என்ற பெயரில் ஊரிக்காட்டிற்கு மாற்றப்பட்ட பொழுது அதே இடத்தில் திரு.ஞா. தையல்பாகர் அவர்களால் ஷசிவகுரு வித்தியாசாலை|| என்ற பெயருடன் தமிழ்ப்பாடசாலை தொடங்கப் பெற்றது. 1926ம் ஆண்டு வரை ஆரம்பப் பாடசாலையாக இயங்கி வந்த பாடசாலை ஆறாம் வகுப்புக்கு மேல் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பு வரை கற்பிக்கும் பாடசாலையாகவும் தற்போது இயங்கி வருகின்றது.
ஆலடியில் நடைபெற்ற பாடசாலை சில வருடங்களுக்குப் பின் இடம் போதாமை காரணமான தற்போதிருக்கும் இடத்தில் திரு தையல்பாகர் அவர்களது முயற்சியால் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. 1942ம் ஆண்டு விஜயதசமித் தினத்தில் புதிய கட்டிடத்தில் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1961ம் ஆண்டு வீசிய புயலால் பாடசாலைக்கட்டிடம் சேதமுற்ற பின்னர் அவற்றை ஓட்டுக் கூரையாக மாற்றி அமைத்தார்கள். இவ்வித்தியாசாலை கடற்கரையோரமாய் நல்ல சூழலில் இயங்கி வருகின்றது. வல்வைப் பெற்றோர்களின் பொருளாதார உதவியுடன் ஆசிரியர்களின் அயரா முயற்சியாலும் நன்கு வளர்ந்து வருகின்றது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பாடசாலையாக திகழ்கின்றது.