வலி சுமக்கும் மனது…

ஓடம் புரளப் போவதறியாமல்

தலைகீழாய்

கைவீசி களித்திருந்த நாட்கள்

பறிபோயாச்சு…

கண்ணீர் தானிப்போ

எங்கள் வாழ்க்கையாயிற்று

எந்தத் தோள்களும் தயாராக இல்லை

எங்கள் வலிகளை

தாங்கவும், இறக்கி வைக்கவும்

ஆறுதல் கூற யாருக்கும்

வார்த்தைகள் வருவதுமில்லை

நறுமணமாய் மோதும் முன்னைய ஞாபக

குவியல்களும்

நிகழ்கால வலிகளின்

முனகல்களுமே

எங்கள் வாழ்க்கையாய் போனது

முகாரிகளினாலும் பாடமுடியாத

உறைபனியின் முகடுகளிலும் கரையாத

எம் வலியின் உணர்வுகளை

முக்காடு போட்டு

மறைத்துக்கொள்ள முயன்றாலும்

பொத்துக் கொண்டு வெளிவருகின்றது

சப்தமின்றி மனதுக்குள்

சத்தியங்கள் செய்திட்ட போதிலும்

நடந்து வந்த பாதையை ஏனோ

மனம் தயங்குகின்றது மறக்க

வருங்காலம் எப்படி விடியுமென்று தெரியாமல்

இருளுக்குப் பழக்கப்பட முயன்றால்

விழிகள் விசமம் செய்கின்றன

இமையோரம் எட்டிப் பார்க்கும்

உவர் நீர்pன் துணை கொண்டு

உள்ளேயிருந்து ஒரு மூச்சை

தள்ளி வருகின்றன பெருமூச்சாய்

மலர் தேடியோடும் பட்டாம்பூச்சியின்

இறக்கை பிய்த்து எறியப்பட்டதாய்

தத்தித் திரியும் தும்பியை

துண்டுகளாக்கப்பட்டதாய்

மனதின் கனமான வலி மட்டும்

கணம் தோறும் கூடும்

எதை இழந்த போதிலும்

நம்பிக்கை ஒன்றே

கைகொடுக்குமென்று நம்பி

காத்திருக்கின்றோம்

எதிர்காலத்தை  நோக்கி…

Leave a Reply

Your email address will not be published.