Search

இளவரசி டயானாவின் அரிய புகைப்படம் 18 ஆயிரம் டொலருக்கு ஏலம்!

இங்கிலாந்து இளவரசி மறைந்த டயானாவின் அரிய புகைப்படம் 18 ஆயிரம் டொலருக்கு ஏலம் போனது. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா. கருத்து வேறுபாடு காரணமாக1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி கணவரை விவாகரத்து செய்தார் டயானா.

விவாகரத்துக்கு பின்னர் 1997ம் ஆண்டு பாரிஸ் நகரில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில், தனது ஆண் நண்பர் டோடி பையத்துடன் டயானா காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் டயானா பரிதாபமாக இறந்தார். இந்நிலையில், இதுவரை யாருமே பார்த்திராத டயானாவின் பிரத்யேக புகைப்படம் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது.

டயானாவின்18 வயதில் (1979 – 1980) இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சார்லஸ் – டயானா நிச்சயதார்த்தத்துக்கு 2 நாள் கழித்து, புகைப்பட கலைஞர் ஒருவர், இங்கிலாந்தின் பிரபல நாளிதழான டெய்லி மிரர் பத்திரிகைக்கு அந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இங்கிலாந்து ராணி குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கருதி, அந்த புகைப்படத்தில் ´பதிப்பிக்க வேண்டாம்´ என்ற குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின், பழைய பேப்பர்கள், படங்களை சேகரிக்கும் நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் டெய்லி மிர்ரர் பத்திரிகையிடம் இருந்து பழைய புகைப்படங்களை விலைக்கு வாங்கியது. அதில்தான் யாருமே பார்த்திராத டயானாவின் புகைப்படம் அந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. அந்த படத்தில்,அடையாளம் தெரியாத ஒரு ஆண் நண்பருடன் டயானா கட்டிலில் படுத்திருக்கிறார். அருகில் ஜன்னலின் மீது விஸ்கி பாட்டில் உள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் நியூ ஹேம்ஷைரில் உள்ள ஆர்.ஆர். ஏல நிறுவனம் ஏலம் விட்டது.

இந்த படம் 18 ஆயிரம் டொலருக்கு விற்பனையானது என்று ஆர்.ஆர்.நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த படத்தை யார் விலைக்கு வாங்கியது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஸ்டான்லி பால்ட்வின்னின் கொள்ளு பேரன் ஆடம் ரஸ்ஸல்தான், டயானா படத்தை வாங்கியிருக்கிறார் என்று மீடியாக்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *