Search

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இராணுவப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட நாடகம்: சிறீதரன் எம்.பி

கிளிநொச்சியில் எனது அலுவலகம் சோதனையிடப்பட்ட சம்பவமும், அதன் பின்னர் எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் இராணுவப் புலனாய்வாளர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உலக வழக்கத்திற்கு மாறாக அப்பாவி யுவதிகளின் குடும்ப வறுமையினை முன்னிறுத்தி ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டமையினை கண்டித்தமைக்காக பழிவாங்கும் வகையிலேயே இந்த நாடகத்தை படையினர் அரங்கேற்றுகின்றனர்.

இதற்கு ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் உலவும் றுசாங்கன் போன்ற இராணுவப் புலனாய்வாளர்கள், உறுதுணை புரிகின்றார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு குறிப்பிடுகையில்,

எமது அலுவலகம் முற்றுகையிடப்பட்டபோது இராணுவத்தில் பெண்கள் இணைந்து கொள்வதை எதிர்த்தவர்கள் நீங்கள் தானா என்ற கேள்வியுடன் ஒரு பொலிஸ் அதிகாரி எனது அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார்.

இதேபோல் குறித்த விடயத்தை பாராளுமன்றில் பேசிய பின்னர் எனது அலுவலக பாதுகாப்பை நீக்கினர். ஊடகங்களுக்கு கருத்துக் கூறியதற்காக என்னை விசாரணைக்குட்படுத்தினார்கள். எனவே அவர்கள் செய்த கபடத்தனத்தை, மிக இழிவான செயலை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நாம் செயற்படக் கூடாது என்றும் நினைக்கின்றார்கள்.

இதுவே எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பின்னாலுள்ள முக்கியமான காரணமாகும். இதேபோல் எமது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்களை அடுத்த சில நாட்களில் துண்டுப்பிரசுரமாக பிரசுரித்து வடக்கு மாகாணம் முழுவதும் அடையாளம் தெரியாத நபர்கள் விநியோகித்திருக்கின்றனர்.

எனவே ஒரு சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிப்பவர்களுக்கு கிடைத்தது? அப்படியென்றால் இந்த நாட்டில் நீதியும் நிர்வாகமும் எங்கே இருக்கின்றது?

அதுபோக எனது மாவட்ட அமைப்பாளரை கைதுசெய்யபோது எனது செயலாளரை கைதுசெய்யவில்லை. பின்னர் அவரை தேடிவந்த குற்றத்தடுப்பு பொலிஸார் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்ததோடு மட்டுமல்லாமல், தாங்கள் ஏற்கனவே கைதுசெய்து கொண்டு சென்ற வேளமாலிகிதனும் எங்கேயோ ஒளிந்திருக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டே தேடியிருக்கின்றார்கள்.

எனவே திட்டமிட்டு இந்த நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது. அது மக்களுக்கு நன்றாகவே புரியும். எனினும் நாம் எமது பணிகளை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை. கடைசி வரையில் எங்கள் பணியை தொடருவோம். அதற்கெதிராக எந்த அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம் என்றார்.
Leave a Reply

Your email address will not be published.