சிரியாவில் ஆற்றில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் ஏராளமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த 22 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இச்சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 60 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரவு பகல் பாராமல் சண்டை நீடிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டது.
மேலும் தொடர் சண்டையின் காரணமாக தலைநகர் டமாஸ்கஸில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையே அலெப்போ நகரில் உள்ள கியூவிக் நதியில் குண்டுகளால் துளைக்கப்பட்ட ஏராளமான சடலங்கள் மிதந்து வருகின்றன.
இதில் நேற்று மட்டும் 68 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அரசு ஆதரவாளர்களை கடத்தி சென்ற புரட்சிபடையினர் தான் இவர்களை சுட்டுக் கொன்றதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ராணுவத்தினர் தான் இவர்கள் கொடூரமாக சுட்டு கொன்று ஆற்றில் வீசியுள்ளதாக புரட்சி படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியில் தொண்டு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.