பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலஸ்டியா பேர்ட் தலைமையிலான குழுவினர்கள் கண்களுக்கு முன்பாக இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கேப்பாபுலவில் வலுக்கட்டாயமாக மீளக்குடியமர்த்தப்பட்ட பெண்ணொருவரை அச்சுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலஸ்டியா பேர்ட் தலைமையிலான குழுவினர் இன்று முல்லைத்தீவில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்துள்ளனர்.
இவர்கள் கேப்பாபுலவில் அரசாங்கத்தினால் வலுக்கட்டாயமாக மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களை பார்வையிடுவதற்கும் அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிவதற்கும் சென்றனர்.
இதன்போது பொது மக்களிடம் பிரித்தானிய அதிகாரிகள் உரையாடிக்கொண்டிருந்தவேளை, அதை மேஜர் தரத்திலான இலங்கை இராணுவ அதிகாரியொருவர் பிரித்தானிய குழுவினர் முன்பாகவே தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்தார்.
பொது மக்களிடம் பிரித்தானிய குழுவினர் எந்த விடயங்களையும் மக்களிடம் கேட்டறியக் கூடாது என்பதற்காகவும் உண்மை நிலையினை அவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவும் கருத்து கூறிய பெண்ணை அச்சுறுத்தும் விதமாக இராணுவ அதிகாரி இவ்வாறு நடந்து கொண்டது பிரித்தானிய குழுவிற்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உடனடியாகவே பிரித்தானியக் குழுவினர் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
ஏற்கனவே இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த இராணுவ அதிகாரியின் செயற்பாடு பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.