அமெரிக்காவில் அவர் பாட்டுக்கு வசித்து வந்த ஒரு பெண் இன்று கானா நாட்டின் ஒரு சின்ன கிராமத்தின் ராணி என்றால் நம்ப முடிகிறதா… அந்தப் பெண்ணுக்கும் கூட அதை இன்னும் நம்ப முடியவில்லையாம். அமெரிக்காவில் ஒரே ஒரு பெட்ரூம் கொண்ட மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண் இன்று 7000 பேர் கொண்ட ஒரு கிராமத்தின் ராணியாக, கானா நாட்டில் வசித்து வருகிறார்.
அந்த அதிர்ஷ்டக்கார பெண்ணின் பெயர் பெக்கிலீன் பார்டல்ஸ். இவர் அமெரிக்காவில் உள்ள கானா நாட்டுத் தூதரக அலுவலகத்தில் செயலாளராக வாஷிங்டனில் பணியாற்றி வந்தவர். இவரைத்தான் தற்போது கானா மக்கள் பிடித்து ராணியாக்கி விட்டனர்.
அந்தக் கூத்தைக் கேளுங்கள்… அமெரிக்காவில் சின்ன வீடு
அமெரிக்காவில் மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்த பார்டல்ஸ் கானாவைப் பூர்வீமாகக் கொண்டவர். இருப்பினும், கானாவுக்கு இவர் அதிகம் போனதில்லை.
சமையல், வீட்டு வேலையில் பிசியாக..
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயம் பெண்களைத்தானே எல்லா வேலைகளையும் செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறது. அதற்கு பார்டல்ஸும் விதிவிலக்கல்ல. அவரும் தனது வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு சமைத்துக் கொண்டு, பாத்திரம் கழுவி சராசரி பெண்ணாக இருந்து வந்தார்.
2008ல் வந்த போன்.. பாதை மாறிய வாழ்க்கை
இந்த நிலையில் 2008ம்ஆண்டு ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு அவருக்கு போன் வந்தது. அதுதான் அவரது வாழ்க்கையை அப்படியே மாற்றிப் போட்டது. அதில் பேசிய நபர், கங்கிராஜூலேஷன்ஸ் பார்டல்ஸ், உங்களை எங்களது ராணியாக தேர்வு செய்துள்ளோம். உடனே வந்து முடி சூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
காமெடி கீமடி பண்ணலையே…
இதைக் கேட்டு கடுப்பாகிப் போனார் பார்டல்ஸ். யாருடா இது நல்லா தூங்கிட்டிருக்கிற நேரத்துல போனைப் போட்டு கலாய்ப்பது என்று கேட்டுள்ளார். ஆனால் மறு முனையில் பேசிய நபர்களோ, மகாராணி, உண்மையாகத்தான் சொல்கிறோம். உங்களை எங்களது ராணியாக தேர்வு செய்துள்ளோம் என்று கூறி விவரத்தை விளக்க ஆரம்பித்தனர்.
மலைத்து்ப போனார் பார்டல்ஸ்
அவர்கள் சொல்லச் சொல்ல தூக்கம் தொலைந்து சீரியஸானார் பார்டல்ஸ். அதாவது ஒடுவாம் என்ற சின்ன மீன்பிடி கிராமம்தான் பார்டல்ஸின் பூர்வீக கிராமமாகும். அவரது குடும்பத்தினர்தான் அந்த கிராமத்தின் அரசர்களாக இருந்துள்ளனர். பார்டல்ஸின் மூதாதையர் அனைவரும் கிராமத்தில் தற்போது இல்லை. இந்த நிலையில் பார்டல்ஸின் இருப்பிடத்தை மிகவும் சிரமப்பட்டு அவரது கிராமத்தினர் கண்டுபிடித்து அவரை ராணியாக அறிவித்துள்ளனர்.
மகிழ்ச்சியில் திளைத்த பார்டல்ஸ்
தனது கதையைக் கேட்டு மகிழ்ச்சியில் திளைத்துப் போனார் பார்டல்ஸ். அவரால் நம்பவும் முடியவில்லை. உண்மையை உணரவும் முடியவில்லை. இருப்பினும் தனது பூர்வீக கிராம மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டார். ராணியாக பதவியேற்க ஒப்புக் கொண்டார் இந்த 55 வயது அமெரிக்க குடிமகள்.
முதல் பெண் அரசர்
அதன் பின்னர் அரசியாகப் பதவியேற்றுக் கொண்டார் பார்டல்ஸ். இவர்தான் இந்தக் கிராமத்தின் முதல் பெண் அரசர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரச குல வழக்கங்களை அவர் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். அரசியாக தனது கிராமத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் சாதாரண செயலாளராக பணியாற்றி வந்த அவர் தற்போது ராணியாகியிருப்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
நம்மையும் யாராச்சும் போன் போட்டுக் கூப்பிட்டு நீதாய்யா இனி எங்களோட ராசா என்று கூறினால் எவ்வளவு நல்லாருக்கும்…