சீனாவைச் சேர்ந்த தொல்பொருளியிலாளர்கள் சமீபத்தில் 1300 வருடம் பழமையான 102 கல்லறைத் தொகுதிகளை சீனாவின்
மேற்கே இருக்கும் பாமிர்ஸ் பீடபூமியில் (Pamirs Plateau) கண்டுபிடித்துள்ளனர். இதில் 40 வீதமான கல்லறைகள் கைக்குழந்தைகளுக்கானது என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து சின்ஜியாங் தொல்பொருள் கழகத்தைச் சேர்ந்த ஐ தாவோ எனும் நிபுணர் கூறுகையில் மரத்தால் ஆன உறைகளால் சுற்றப்பட்ட வறட்சியான சடலங்கள், கல்லால் ஆன சிறு உருவங்கள், மட்பாண்டம் மற்றும் சடலங்களை எரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செப்பு உறைகள் என்பவை உள்ளேயிருந்து கண்டெடுக்கப் பட்டன எனத் தெரிவித்துள்ளார். மேலும் இக்கல்லறைத் தொகுதி 1500 சதுரகிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 20 மீட்டர் உயரத்திலுள்ள குன்றில் இருந்தன எனவும் இது கல்லறைக்குப் பொருத்தமான இடமேயில்லை எனவும் கூடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொல்பொருள் ஆய்வுக் குழு இக்கல்லறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பல கைக்குழந்தைகளின் சடலங்களைப் பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் இக்குழந்தைகள் யாவும் கொல்லப் பட்டனவா அல்லது இயற்கையாக மரணமடைந்தவையா என கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்படுகின்றது.
மேலும் இந்தக் கல்லறை கி.மு 618-907 இல் நிலவிய டாங்க் ராஜ வமிசத்தில் (Tang dynasty) கட்டப் பட்டிருக்கலாம் எனவும் அக்காலத்தில் சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார கலாச்சாரத் தொடர்புகள் பண்டைய பட்டுப் பாதையினூடாக (Silk road) பேணப்பட்டு வந்தன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை இந்த கல்லறைத் தொகுதி கடந்த வருடம் உள்ளூர் நீர் மின்சார செயற்திட்டத்துக்கான கட்டுமானம் நடைபெற்ற போது ஏதேச்சையாகக் கண்டு பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.