தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியிலேயே சிறிலங்கா அரசும், படைத்தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காகவே தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு பிரதேச மீனவர் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
முல்லைத்தீவு, மாத்தளன் பகுதியில் மொறவௌ பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவக் குடும்பங்கள் அந்தப் பகுதி மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி இராணுவப் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டு மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்கள உயர் அதிகாரிகள் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும், சிங்கள மீனவக் குடும்பங்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிங்கள குடும்பங்கள் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர் என முல்லைத்தீவு மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். எதிர்வரும் 8 ஆம் திகதி கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் முல்லைத்தீவுக்கு வரும் போது அவரின் கவனத்திற்கு கொண்டுவருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டால் மாத்தளன், பொக்கணை, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம், பகுதிகளைச் சேர்ந்த சுமார் 625 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளையே பாவிக்க உள்ளனர்.