
அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுளளதாவது:
சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது. மிகவும் கடினமான- சவால் நிறைந்த இப்பணியை நிறைவேற்றுவதானது தேசத்திற்கு நீதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும்.
நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் சந்தேகத்துடனும் நோக்கத் தேவையில்லாத ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது.
நாட்டுக்கு எதிராக அணிவகுத்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடிப்பதற்கு நாம் உறுதியான அர்ப்பணத்துடன் செயற்பட்டோம்.
தலைமைத்துவம் கடினமான சவால் நிறைந்த சூழ்நிலைக்கு முகங்கொடுக்க நேர்ந்த போதும் நாம் நாட்டை காட்டிக்கொடுக்காத இலட்சியத்தைக் கொண்டவர்கள்.
எமது மக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கும் பாரிய ஒத்துழைப்பிலிருந்து நாம் மிகப்பெரும் பலத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
சமூகங்களுக்கிடையிலான ஐக்கியமும் சமய நல்லிணக்கமும் நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கிய அம்சங்களாகும். எமக்கு மத்தியிலான பிரிவினைகள் எமது சுதந்திரத்தை எமக்கு மறுக்கும் பல்வேறு சக்திகளை பலப்படுத்திவிடும்.
எல்லா சமூகங்களும் ஐக்கியமாக எழும்போது நாட்டுக்கு எதிரான சக்திகள் பல்வீனமடைந்து சுதந்திரம் மேலும் பலப்படும். தேசிய ஐக்கியத்திற்கான மிகுந்த உறுதியுடனும் தெளிவான அர்ப்பணத்துடனும் நாம் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு உயர்ந்த தியாகங்களைச் செய்த எல்லா நாட்டுப்பற்றுடையவர்களுக்கும் நாம் எமது மரியாதையைச் செலுத்துகிறோம் என ஜனாதிபதி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.