இலங்கை இராணுவம் வீழ்ச்சியடைந்து வரும் பலம்! – சுபத்ரா

இலங்கை இராணுவம் வீழ்ச்சியடைந்து வரும் பலம்! – சுபத்ரா

திருகோணமலையில் நாளை நடைபெறப்போகும் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் பிரமாண்டமான படை அணிவகுப்பு இடம்பெறும். அதில் இராணுவப் படைப்பிரிவுகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் செல்லும். ஆனால் அவை எதுவும் இலங்கை இராணுவத்தின் பலம் வீழ்ச்சியடைந்து வருவதை வெளிப்படுத்துவதாக அமையப் போவதில்லை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்காக திடீரெனப் பெரியளவில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தின் ஆட்பலம், சடுதியாக குறையத் தொடங்கியுள்ளதாக அண்மையில் வெளியான புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கை 71,458 பேர் என்பதை அண்மையில் இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களில் 33,532 பேர் மீளவும் திரும்பப் போவதில்லை. அவர்கள் இராணுவத்தை விட்டே நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டனர்.

மீதமுள்ள சுமார் 39 ஆயிரம் படையினரைத் தேடிப்பிடிக்கும் முயற்சிகளில் இராணுவம் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியான போதிலும், அவை ஒன்றும் பெரியளவில் வெற்றியைத் தரப் போவதில்லை. தப்பி ஓடியவர்கள் ஓடியவர்களாகவே இருக்கப் போகின்றனர்.

இலங்கை இராணுவத்தின் சரியான ஆட்பலம் எவ்வளவு என்று கூறமுடியாத நிலையில் தான் இராணுவத் தலைமையகம் உள்ளது. காரணம் இந்த தப்பியோடிய படையினர் விவகாரம் தான்.

போர் முடிவுக்கு வந்து சுமார் ஒரு ஆண்டுக்குப் பின்னர் 2010ம் ஆண்டு யூலை மாதம் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இலங்கை இராணுவத்தில் நன்கு பயிற்சி பெற்ற 203,000 படையினர் இருப்பதாக கூறியிருந்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய.

1983ல் போர் தொடங்கிய போது வெறும் 12,000 ஆக இருந்த இலங்கை இராணுவத்தின் ஆட்பலம் தொடர்ச்சியான ஆட்சோ்ப்புகளின் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் இரட்டிப்புப் பலத்தைப் பெற்றது.

1987ம் ஆண்டின் இறுதியில் 40,000 படையினருடனும், 1990ல் 90,000 படையினருடனும் இருந்த இலங்கை இராணுவத்தின் ஆட்பலம் 2006ல் விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்தம் முடிவடையும் கட்டத்தில் 120,000 ஆக அதிகரித்திருந்து , விடுதலைப்புலிகளுடன் இறுதிப போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், பெருமளவில் ஆட்சோ்ப்பு நடத்தப்பட்டு, இராணுவத்தின் ஆட்பலம் இரட்டிப்பாக்கப்பட்டது.

2008 – 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தின் ஆட்பலம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்தைத் தொட்டிருந்தது.

இவர்களில் நான்காவது கட்ட ஈழப் போரில் சுமார் 6ஆயிரம் படையினர் வரை கொல்லப்பட்டு விட்டதாலும், போரில் படுகாயமுற்ற 25 ஆயிரத்துக்கு அதிகமான படையினரில் குறிப்பிட்டளவானோர் மீளவும் படைக்குத் திரும்ப முடியாதுள்ள நிலையிலும், 2010ம் ஆண்டு யூலை மாதம் இராணுவத்தின் ஆட்பலம் இரண்டு லட்சமாக கீழிறங்கியது.

ஆனால் கடந்த ஆண்டின் முதல் காலாண்டு நிலைவரப்படி இராணுவத்தின் மொத்த ஆட்பலத்தில் மூன்றில் ஒரு பங்கை விடவும் அதிகமானோர் தப்பியோடியவர்களாக உள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த சுமார் நான்கு ஆண்டுகளில் 75 ஆயிரம் படையினர் இலங்கை இராணுவத்தை விட்டுத் தப்பியோடி விட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இவர்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் இராணுவத்தை விட்டு ஓய்வுபெற்றுச் சென்ற படையினர் சோ்க்கப்படவில்லை.

அதேவேளை புதிதாக உள்வாங்கப்பட்ட படையினரும் சோ்க்கப்படவில்லை.

இலங்கை இராணுவம் புதிதாகப் படையினரைப் பெருமளவில் உள்வாங்கவில்லை என்ற நிலையில், ஓய்வுபெற்ற படையினர் மற்றும் புதிதாக உள்வாங்கப்பட்ட படையினரின் எண்ணிக்கைகள் மொத்த ஆட்பலத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஆனால் தப்பியோடிய படையினர் விவகாரம் என்பது இராணுவத்தைப் பொறுத்த வரையில், சிக்கலானதொரு பிரச்சினையாகவே உள்ளது.

போர் நடந்துகொண்டிருந்த போதும் இது நிகழ்ந்தது. போர் முடிந்த பின்னரும் இது தொடர்கிறது.

அதாவது சண்டைக் காலத்திலும், அமைதிக் காலத்திலும் இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் தொகை குறையவில்லை.

எனவே இராணுவத்தை விட்டுத் தப்பியோடுவதற்கு அடிப்படைக் காரணம் போர் அல்லது போர் பற்றிய அச்சம் மட்டுமல்ல.

அதற்கும் அப்பால் இராணுவத்தின் கொள்கை, பயிற்சித் தரம் என்பன அதில் முக்கியமானவை.

தொடர்ந்து போரிட்டு வந்த படையினருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், அதனால் தான் தப்பியோடுவது அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

போர் முடிவுக்கு வந்ததும், இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா இராணுவத்தின் ஆட்பலத்தை மேலும் ஒரு லட்சம் பேரால் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

தொடர்ச்சியாகப் போரிட்டு வந்த படையினர் களைப்படைந்து விட்டனர் என்றும், அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால், தான் ஆட்பலத்தை அதிகரிக்க வலியுறுத்தியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தனது திட்டம் செயற்பட்டிருந்தால் களைப்படைந்துள்ள படையினருக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட்டு பலமான இராணுவத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்க முடியும் என்பது சரத் பொன்சேகாவின் வாதம்.

அவரது யோசனையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாததற்கு பல காரணங்கள் இருந்தன.

அவை தனியே பாதுகாப்பு சார்ந்தவை மட்டுமல்ல. அரசியல் பொருளாதார ரீதியான காரணங்களும் அடங்கியிருந்தன.

அந்தக் காரணங்களின் மீதான நியாயப்பாடுகள் எப்படியிருந்தாலும் கூட, இராணுவத்தின் ஆட்பலத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற முடியாத நிலையில் தான் அரசாங்கம் உள்ளது என்பது உண்மை.

போரின் போது ஓய்வில்லாமல் படையினருக்கு மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு.

இதற்கு அமெரிக்க இராணுவம் கூட விதிவிலக்காக முடியாது.

கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் போன்ற களங்களில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை விட, தற்கொலை செய்துகொண்ட அமெரிக்கப் படையினரின்’ எண்ணிக்கையே அதிகம்.

அமெரிக்கப் படையினரில் 222 பேர் தான் கடந்த ஆண்டில் போர் நடவடிக்கைகளில் உயிரிழந்தனர்.

ஆனால் அதைவிட அதிகமாக 247 அமெரிக்கப் படையினர் கடந்த ஆண்டில் தற்கொலை செய்துகொண்டனர்.

இதேபோன்ற நிலைமை தான் இலங்கை இராணுவத்திலும் உள்ளது.

தொடர்ச்சியான போர், கொடுமையான காட்சிகள், ஓய்வில்லாமல் போனதால் ஏற்பட்ட களைப்பு, மனச்சோர்வு, மன அழுத்தம் என்பன இலங்கை இராணுவத்தையும் கொஞசம் கொஞ்சமாக பலவீனப்படுத்தி வருகிறது.

தற்கொலைகள், தமக்கிடையிலான துப்பாக்கி மோதல்கள், தப்பியோடுதல் என்பன இராணுவத்தின் ஆட்பலத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.

ஒரு தொழில்முறைசார் இராணுவமாக இலங்கை இராணுவம் இருப்பதாகவும், மிக உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாகவும், அதனால் தான் போரில் வெற்றியைப் பெற முடிந்ததாகவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆனால் இராணுவத்தின் ஆளணி வளப் பட்டியலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கினர் எங்கே என்று தெரியாத நிலையில் தான் இலங்கை இராணுவம் உள்ளது.

ஒரு இராணுவத்திற்கான அங்கீகாரம் என்பது தனியே போரில் அதன் திறனை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல.

அமைதிக் காலத்தில் அதன் கட்டுக்கோப்பு குலைந்து போகாமல் பாதுகாப்பதிலும் அது தங்கியுள்ளது.

ஏனென்றால் ஒரு இராணுவம் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருப்பதில்லை.

போர் என்பது குறுகிய காலத்துக்கானதே. மீதமுள்ள பெரும்பகுதி அமைதிக்காலம் தான்.

விடுதலைப் புலிகளுக்கும் கூட அமைதிக்காலம் தான் மிகவும் சவாலானதாக இருந்தது என்பதை மறக்க முடியாது.

அமைதிக் காலத்தில் கட்டுக்கோப்பைப் பேணத் தவறிய, எந்தவொரு படையாலும் பலமானதாக நிலைத்திருக்க முடியாது.

இத்தகைய நிலையில் மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் பேணும், தொழில்முறைசார் இராணுவம் என்ற உரிமை கோரல் எந்தளவுக்குச் சரியானது என்ற கேள்வி தவிர்க்க முடியாததே.

சுபத்ரா

Leave a Reply

Your email address will not be published.