உலகப் புகழ் பெற்ற குத்து சண்டை வீரர் முகமது அலியின் (வயது 71) உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது சகோதரர் ரஹ்மான் அலி கூறியுள்ளார்.
1984ம் ஆண்டு பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, அதன் பின்னரும் பல வருடங்களாக சுறுசுறுப்பாகவே இருந்து வந்தார்.
1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார்.
2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பலவீனமாகவே காணப்பட்ட அவர், மேடை ஏறுவதற்கு மனைவி லோனி உதவி செய்தார்.
தற்போது முகமது அலியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாக கூறும் அவரது சகோதரர் ரஹ்மான் அலி, முகமது அலியால் பேசமுடியவில்லை என்றும், அவரால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முகம்மது அலியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதால் அவர் நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பதாகவும், வரும் கோடைக்காலத்திற்குள் அவர் உயிர் பிழைத்து இருப்பதே அரிது என்றும், இருந்தாலும் அவர் உயிருடன் இருபது கடவுள் கையில் என்றும் ரஹ்மான் அலி கூறியுள்ளார்.
முகமது அலியைப் பார்ப்பதற்கு, அவரது குடும்பத்தினர் யாரையும் மனைவி லோனி அனுமதிக்கவில்லை என்றும் குறை கூறியுள்ளார்.
ரஹ்மான் அலியும் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.