யு-டியூப்’பில் வெளியிட்ட விடியோ மூலம் அமெரிக்காவுக்கு எதிராக பகிரங்கமாகப் போர்ப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது வட கொரியா. கொரிய இளைஞர் கனவு காண்பதாகத் தொடங்கும் அந்த 3 நிமிட விடியோவில், வட கொரியாவில் இருந்து புறப்படும் ஏவுகணை, நியூயார்க் நகரைத் தாக்கி அழிப்பதாக முடிகிறது.
அழிக்கப்படுவது அமெரிக்க நகரம்தான் என்பதை உணர்த்த அந்நாட்டு தேசியக் கொடியும் தீப்பிழம்புக்கு நடுவே தோன்றி மறைகிறது. இதன் பின்னணியில் “”நாங்கள்தான் உலகம்” என்று பிரபல பாப் பாடலின் இசை ஒலிக்கிறது.
இந்த விடியோ முழுவதுமே கற்பனையாக வடிவமைக்கப்பட்ட “உயர் நவிற்சி’ என்றாலும், வட கொரியா இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் மீது அமெரிக்கா மேலும் தீவிரமான போர் நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயம் என்ற நிலையை வட கொரியாவே ஏற்படுத்தியுள்ளது.
மன்னராட்சிக் காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம்வரை போர் என்பது இனம், மத வெறி, தனிப்பட்ட வன்மம், ஆக்கிரமிப்பு மனோபாவம் உள்ளிட்டவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சில நேரங்களில் நவீன ஆயுதங்களைப் பரிசோதிப்பதற்காகவும் போர் பயன்படுத்தப்பட்டது. ஒரு சில போர்கள் மட்டுமே நாடுகள் தங்கள் எல்லையைக் காக்கவும், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் நடத்தப்பட்டவையாக உள்ளன.
பண்டையகால மன்னர்களின் படையெடுப்புகள் பிறநாடுகளின் செல்வத்தைக் கொள்ளையடிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் நவீனகாலப் போர்களின் மையமாகத் திகழும் அமெரிக்காவானது ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகள் மீது தொடுக்கப்பட்ட போரின் பின்னணியில் அதன் உள்நாட்டுப் பொருளாதார நலன்கள் சார்ந்திருந்தன.
அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள நிதி நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள மீண்டும் ஒரு போரை ஆரம்பித்து நடத்த வேண்டுமென்று ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்து அதிர்ச்சி அளித்துள்ளது அமெரிக்க ராணுவத்தின் ஆய்வு, மேம்பாட்டு அமைப்பான “ரேண்ட் கார்பரேஷன்’. உலகின் ஏதாவது ஓர் இடத்தில் போர் நடத்தி அதன் மூலம் தங்கள் பொருளாதார நலன்களைக் காத்துக் கொள்வது என்பது அமெரிக்காவுக்கு மட்டுமேயான சூழ்ச்சிக் கலை. சிரியாவில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் முழுவீச்சில் பயன்படுத்தப்படுவது அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள்தான்.
“”அமெரிக்க தொழில்துறை பெருமளவில் ஆயுதத் தயாரிப்பையே சார்ந்துள்ளது. ஆயுதம், ராணுவத் தளவாட ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பது அமெரிக்காதான்.
எனவே போர் என்று வரும்போது, வெளிநாடுகளில் மட்டுமின்றி, நமது ராணுவத்துக்கும் அதிக ஆயுதங்கள் தேவைப்படும். அவற்றை நமது அரசே வாங்கும்போது, ஆயுதத் தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரித்து லாபம் பெருகும். இதன் தொடர் விளைவுகள் பிற துறைகளிலும் எதிரொலித்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் திரும்பும்.
“”இந்த வழியை விட்டுவிட்டு வங்கிகளை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பது, வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு என அரசு பல பில்லியன் டாலர்களை செலவிடுவது தேவையற்றது. இத்தொகையைக் கொண்டு போருக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்” என்பது ரேண்ட் கார்பரேஷன் அரசுக்கு அளித்துள்ள ஆலோசனை.
இப்போது இதனைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை, தேடிவந்து அமெரிக்காவுக்கு அளித்துள்ளது வட கொரியா. ஏற்கெனவே இருமுறை அணு ஆயுதப் பரிசோதனை நடத்தியுள்ள அந்நாடு இப்போது மூன்றாவது ஆணு ஆயுதப் பரிசோதனைக்குத் தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளது.
ராணுவம் சார்ந்த வாரிசு ஆட்சி நடைபெற்று வரும் வட கொரியாவில் கிம் ஜோங்-உன் தலைமையேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளும், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதப் பரிசோதனைகளும் தீவிரமடைந்துள்ளன. இதனால் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஆகியவற்றின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி கடுமையான பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொண்டுள்ளது வட கொரியா.
இதனைத் தங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம் என்று சாடியுள்ள வட கொரியா, தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் தென் கொரியாவைத் தாக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே தென் கொரியாவைத் தங்களது ராணுவத் தளமாக்கிவிட்ட அமெரிக்கா, போதிய அளவு படை பலத்தை அங்கு நிலை நிறுத்தி போரைத் தொடங்க சிறு பொறி மட்டுமே கிளம்பக் காத்திருக்கிறது.
அமெரிக்காவை எதிர்கொள்ளும் அளவுக்கு வட கொரியாவிடம் ஆயுதம் கிடையாது என்றாலும், போர் ஏற்பட்டால் அண்டை நாடான தென் கொரியாவை முதலில் சின்னாபின்னமாக்கிவிடும். மூர்க்கமான தலைமையைக் கொண்டுள்ள அந்நாடு அணு ஆயுதத்தை உடனடியாகக் கையில் எடுக்கும் அபாயம் உள்ளது. இதனால் சுடுகாடாக மாற இருப்பது கொரிய தீபகற்பப் பகுதிதானே தவிர அமெரிக்கா அல்ல.
இறுதியில் ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் ஏற்பட்டதைவிட மோசமான நிலையே இரு கொரிய நாடுகளுக்கும் ஏற்படும்.
அமெரிக்காவின் பொருளாதார வளத்தை மேம்படுத்த போர் ஒன்றே தீர்வு என்ற மறைமுக உத்தியில் வட கொரியா விழுந்துவிட்டால், லாபம் அமெரிக்காவுக்குத்தானே தவிர, வட கொரியாவுக்கு அல்ல. இதை வடகொரியத் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் அமெரிக்க மண்ணில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையாவது, “வெறுமனே போர் வேண்டாம், அமைதி நிலவட்டும்’ எனக் கூறிக் கொண்டு அமெரிக்காவின் செயல்களை ஆதரிப்பதை விடுத்து ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் கொரியா எனும் பிராந்தியம் இருந்தது என்பதை வரலாற்றில்தான் படிக்க நேரிடும்.