கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை இந்த ஆண்டு சிறிலங்காவில் நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கும் என்று லண்டனில் உள்ள அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்தை அறிந்து கொள்வதற்காக கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கடந்த செவ்வாயன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதை சுட்டிக்காட்டியுள்ள லண்டன் அவதானிகள், முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் இந்தியாவினால் சிறிலங்காவுக்கு உதவ முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிலங்காவின் தலைமைநீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்ட விவகாரம் குறித்து கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் முறையிட்ட கனடா, ஏப்ரலில் லண்டனில் நடக்கவுள்ள அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இதுகுறித்து ஆராய வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
கொமன்வெல்த் நடவடிக்கைக்குழு தமது நிகழ்ச்சிநிரலில் சிறிலங்காவைச் சேர்த்துக் கொண்டால், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை கொழும்பினால் நடத்த முடியாது.
இதனிடையே, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா இன்று கொழும்பு வரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் 13ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
கமலேஸ் சர்மா சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மதிய விருந்துடனான சந்திப்பு ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அவருக்கு இராப்போசன விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் சமல் ராஜபக்ச, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரையும் சர்மா சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, அடுத்த கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரத்தை உள்ளடக்குவது தொடர்பான கனடாவின் முயற்சிகள் குறித்த சட்ட நுணுக்கங்கள் தொட்ர்பாக கடந்த 5ம் நாள், லண்டனுக்குச் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கமலேஸ் சர்மாவுடன் பேசியிருந்தார்.
இதன்போது சிறிலங்கா விகாரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், அது பேர்த்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு முரணானது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.