
Quasi-stellar radio source (“quasar”) என்பது தான் ‘குவஸார்’. ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy)மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற்றலைத் தான் ஒளியாக, மின்காந்த அலைகளாக வானில் பல பில்லியன் கிலோ மீற்றத் தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கின்றன.
இந்நிலையிலேயே இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் ‘குவஸார்கள்’ அடங்கிய ஒரு மண்டலத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG)எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம். ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீற்றர்கள். நமது சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.
நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கெலக்ஸி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கெலக்ஸி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்ஸியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
வழமையாக இருவேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள். அந்தளவுக்கு இந்த மண்டலம் பெரியதாக உள்ளதாம்.
இந்த மாபெரும் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையிலும் நாம் விண்வெளி குறித்து வைத்திருந்த மாதிரிகள் கணக்கீடுகள் அனைத்தும் துவம்சமாகியுள்ளன. குறிப்பாக எல்பர்ட் ஐன்ஸ்டீனின் அண்டவியல் கொள்கையை (Cosmological Principle) இது கேள்விக்குறியாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்டத்தை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பது இந்தக் கொள்கையின் சாரம்சம். ஆனால், இந்த மாபெரும் மண்டலம், அந்தக் கொள்கையை சிதைக்கிறது. இதனால் இந்த புதிய மாபெரும் ‘குவஸார்’ மண்டலம், அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாந்தங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ரோயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.


