
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர் பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்தி கரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்: தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்: இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
Watch live streaming video from vvtuk at livestream.com