Search

கண்ணீர் வந்தால் துடைத்துவிடு..! இசையும் கதையும் கே.எஸ்.துரை

அலைகள் வழங்கும் புத்தம் புதிய இசையும் கதையும்… ஒலி .. எழுத்து.. காட்சி..

கண்ணீர் வந்தால் துடைத்துவிடு ( இசையும் கதையும் )

உருண்டையான சிறைக்கம்பிகளில் எனது கண்ணீர்த்துளிகள் தெறித்து ஆறுபோல வழிந்து என்னையே நனைக்கிறது… எவ்வளவு நேரம் இப்படியே இருந்தேனோ எனக்கே தெரியாது..

காடுபோல வளர்ந்து கிடக்கும் என் தாடியை தடவிக் கொள்கிறேன்.. ம்… கண்கள் மங்குகின்றன… அங்குமிங்குமாக சில மின்னல்கள்…. மரணத்தின் தடயம் தெரிகிறது… மூச்சை இறுகப் பிடித்துக் கொள்கிறேன்…

அதற்குள் ஆம்.. ஆம்… எனது தவறை நாளைக்கு இன்னொருவர் விடக்கூடாது… இந்த உலகத்திற்காக என் மரண வாக்கு மூலத்தை கடிதமாக எழுதி வைத்துவிட நினைத்து அவசரமாக எழுத ஆரம்பிக்கிறேன்….

கதையைக் கேட்டதும் மறந்துவிடு.. கண்ணீர் வந்தால் துடைத்துவிடு..

கடவுளே… இந்தக் கதை இனி எந்தவொரு மனிதனின் வாழ்விலும் நடக்கக்கூடாது படித்த ஒவ்வொருவரும் உடன் மறந்துவிட வேண்டிய கதை…

ஆதர்ஷ்…! இந்த டென்மார்க்கில் என்னை எல்லோருக்குமே தெரியும்…

எல்லோருக்கும் வாழ்வில் வரும் பொன்னாள் அன்று எனக்கும் வந்தது..

அஜந்தா… அவள் பெயரைக் கேட்டால் அஜந்தா குகை ஓவியங்களே நாணித் தலை குனியும் அப்படியொரு அழகு..

திருமணத்திற்காக இலங்கையில் சென்று இறங்கியபோது ஓ… பட்டபிளை… பட்டபிளை… ஏன் விரித்தாய் சிறகை…. இப்படியொரு தேவதை எனக்குக் கிடைக்கப் போகிறாள் என்று நான் நினைக்கவே இல்லை..

படபடவெனச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிபோன்ற கண்கள்… முத்து முத்தான பற்கள்… குறை நிறையின்றி கடவுள் என்ற சிற்பி செதுக்கிய தங்கச் சிற்பம்… வட்..ஏ..பியூற்றிபுல்..

கெட்டி மேளம் கொட்டி முழங்க.. நல்லூர் முருகன் ஆலயத்தில் அவள் கழுத்தில் தாலியைக் கட்டியபோது.. நான் ஆகாயத்தில் சிறகின்றிப் பறந்தேன்… அந்த ஊரே என்னை பொறாமையுடன் பார்ப்பதைப் போலிருந்தது..

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்.. காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்.. பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

என் நெஞ்சில் ஆடிக் கொண்டிருந்த அந்த மலரை ஐரோப்பா அழைத்து வந்து வாழ்க்கையை அமர்க்களமாக ஆரம்பித்தேன்…

வருடங்கள் நாட்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன..

ஆனந்தம் மலர்களை பூத்துச் சொரிந்தது… கடவுளுக்கே அந்த இன்பம் பொறுக்கவில்லைப் போலும்… எங்கள் குடும்பத்தில் வந்து புகுந்தான் என் புதிய நண்பன் வர்கீஸ்..

திருமணத்தின்போது கைவிட்ட மதுப்பழக்கம் மறுபடியும் என்னைத் தொற்றிக் கொண்டது…

அவள் எவ்வளவோ சொன்னாள், மன்றாடினாள்.. நான் கேட்கவில்லை… என்னை நினைத்தால் குடிப்பேன்.. என்னை மறந்தால் குடிப்பேன்… உறங்குவதற்காக குடித்தேன்… விழித்ததும் குடித்தேன்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் – இதுதான் எந்தன் உலகம் எந்தன் உலகம்..

இப்படிப் போன என் வாழ்வு இறுதியில் என் வேலையும் பறித்துக் கொண்டது..

அப்பொழுதுதான் திருமணம் செய்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்ந்தால் மேலை நாட்டில் அதிக சலுகைகளை பெறலாம் என்ற தகவலை என் நண்பன் வர்கீஸ் என் காதுகளில் போட்டான்..

எனக்கு வேண்டியது பணம்… பணம்.. பணம்.. பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே.. போதையில் பாடினேன்…

அவளை அடித்தேன்… அந்த அழகு சிற்பத்தை அலங்கோலமாக்கினேன்.. பணத்திற்காக விவாகரத்து செய்து அளைப் பிரிந்து வேறு வீடு போனேன்…

;அதிக வருமானத்திற்காக அழகான குடும்பம் என்ற கோயிலை இடித்தேன்..

நான் தனிமனிதன், குடும்பம் இல்லாதவன் என்று இரவுகளில் வீதிகள் தோறும் அலைந்தேன்… விபச்சாரிகளின் வீடுகளில் தூங்கி எழுந்தேன்..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு – ஒரு கோலமயில் என் துணையிருப்பு – இசை பாடலிலே என் உயிர் துடிப்பு.. நான் பார்ப்பதெல்லாம் அழகின் துடிப்பு..

மெல்ல மெல்ல நான் என் குடும்பத்தை தொலைக்க ஆரம்பித்தேன்… தொலைந்து தொலைந்து இப்போது தலைநகரின் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டேன்.. ரயில் நிலையத்தில் தூங்குவதும், எங்காவது கிடக்கும் வெற்று பியர் போத்தல்களை பொறுக்கி விற்று குடிப்பதுமாக இருக்கும் என்னை மற்றவர்கள் பைத்தியம் போல பார்த்தார்கள்.. சிரித்தார்கள்..

அன்று..

தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா.. இல்லை நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்…

உலகம் என்னைப் பார்த்துப் பாடியது..

நாட்கள்… வருடங்களாகின… எனக்கொரு மனைவி பிள்ளைகள் இருப்பதை தீர மறந்துவிட்டேன்… அப்போதுதான் அந்தக் கொடிய செய்தி என் காதுகளில் விழுந்தது..

என் மனைவி அஜந்தாவுக்கு மறுமணம்… ஆ.. இடியேறு கேட்ட நாகமாக துடித்தெழுந்தேன்..

மணமகன் யார்… கூ.. இஸ்.. த பிளாக் சீப்… என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கொடியவன் வர்கீஸ் மணமகன்… ஆ.. கையே என் கண்ணைக்குத்த கண்டேனா.. கல்லை நான் பூசை செய்து நின்றேனா.. நஞ்சை செந்தேனா எண்ணி உண்டேனா.. தீயை நான் தென்றல் என்று சொன்னேனா.. ஆ..

ஆ.. ஏமார்ந்துவிட்டேன்…

காதல் போதையில் கண்களை இழந்தேன்…

மதுவின் போதையால் கொண்டவளை பிரிந்தேன்…

கண்டவள் பின் சுற்றி நோயாளியானேன்…

இன்று என் நண்பனே என்னை வஞ்சித்துவிட்டான்…

ஒரு நொடியில் மிருகமானேன்..

பறந்து போனேன்…

அவள் வீட்டின் படிக்கட்டுக்களால் பாய்ந்து பாய்ந்து ஏறினேன்…

கதவு மணியை அடித்தேன்..

ஓடிவந்து திறந்தாள்… அ.. அவள்… அவளேதான்… பாவி… என் அஜந்தா… காட்டு ஓநாய்போல மிருகமானேன்… சரேல்… ஒரே குத்து அவள் குரல்வளையை கத்தியால் கோலி அறுத்தேன்..

ஏதோ சொல்ல வாயெடுத்தாள் அப்படியே நின்று போனது மூச்சு என் மடியில் அவள் உயிர் பிரிந்தது..

ஆ.. ஐயோ… அழுதேன்..

உச்சிமரக் கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் நான்…

நான் கேள்விப்பட்டது பொய்… என் ஆசை மனைவி ஓர் உத்தமி என்பதை அவள் இறந்த பிறகுதான் அறிந்தேன்…

நான் மட்டும் விலைமாதர் வீட்டில் கிடக்கலாம் ஆனால் அவள் மட்டும் மறுமணம் முடிக்கக் கூடாதா என்ன சுயநலம்… நான் ஒரு மனித மிருகம்..

ஆத்திரத்தில் அறிவை இழந்த பாவியாகிவிட்டேன்…

14 வருடங்கள் சிறை…

சிறைக்குள் இருக்கும்போதுதான்.. உடம்பில் இனம்புரியாத வலி.. எயிட்ஸ் என்னைப் பிடித்திருப்பது அப்போதுதான் தெரிந்தது..

சிறையில் இருந்து விடுதலையாக முன் எயிட்ஸ் என்னை கொன்று தள்ளப்போகிறது…

சில மணி நேரங்களில் உயிர் பிரியப்போகிறது.. சிறு தொகை பணத்திற்கு ஆசைப்பட்டு அழகிய வாழ்வை அழித்த இந்தக் கதை மற்றவர்களுக்கு பாடமாகட்டும் என்று எழுதி முடிக்கிறேன்…

கதையைக் கேட்டதும் மறந்துவிடு.. கண்ணீர் வந்தால் துடைத்துவிடு..

இசையும் கதையும்..

பிரதியாக்கம் : ஒலி கே.எஸ்.துரை வடிவமைப்பு மிதிலா.. வெளியீடு 11.02.2013
Leave a Reply

Your email address will not be published.