சாவித்திரி அத்துவிதானந்தனின் போரும் வலியும்.. நூல் ஆய்வு

சாவித்திரி அத்துவிதானந்தனின் போரும் வலியும்.. நூல் ஆய்வு

திரைப்பட இயக்குநர் சேரன் தானாக முன்வந்து வெளியிட்ட ஈழப்போர் வலிகள்…

சாவித்திரி அத்துவிதானந்தன் எழுதிய போரும் வலியும் நேற்று கைக்குக் கிடைத்தது.. 19 வலி மிக்க படைப்புக்களைக் கொண்ட உண்மைச் சம்பவங்களை அடக்கிய சிறுகதைத் தொகுப்பு..

வாசிக்கத் தொடங்கிய சொற்ப நேரத்தில் கடைசிப்பக்கம் வந்துவிட்டது, ஆனால் அதற்குப் பிறகுதான் வலி ஆரம்பித்தது.. நெஞ்சில் உறங்கிக் கிடக்கும் ஈழப்போரின் துயரங்கள் மன உலையில் வெளிவந்து இரவு முழுவதும் விழித்திருக்க வைத்துவிட்டன.

தேகத்தில் அல்ல தேகத்தை கட்டமைத்திருக்கும் ஒவ்வொரு செல் துணிக்கைகளிலும் தேள் கொட்டியதைப்போன்ற வலி.. புத்தகம் 216 பக்கங்கள் கொண்டது.. அதைப் படிக்கும்போது உண்டாகும் வலியும், கோபமும் எப்படி இருக்கிறதென்பதை எழுதப்புறப்பட்டால் 2000 பக்கங்கள் போதாது..

நூல் பற்றிய ஒரு பொதுப்பார்வை :

நூலின் ஆசிரியர் சாவித்திரி அத்துவிதானந்தன் தமிழீழப் போர்பற்றிய பல்வேறு ஆக்கங்களை எழுதியவர், போருக்குள் வாழ்ந்தவர், அதுபற்றி துல்லியமாக அறிந்தவர், அதற்கான அத்தனை ஆகுதிகளையும் கொடுத்தவர், பொய், போலிமை எதுவுமற்ற நோக்குடன் படைப்பை வெளிக் கொணர்ந்துள்ளார்.

மாவீரனாகிவிட்ட தன் செல்வத்தின் பெயரை சொல்ல முடியாது தவிக்கும் தந்தை ஒருவருடைய கதையை ஓரிடத்தில் எழுதியுள்ளார், அந்த உணர்வுகளில் அவருடைய இதயத்தை மறைக்க அவரால் முடியவில்லை.

நூலின் அரைப்பங்கு முள்ளிவாய்க்கால் அவலங்களையும், மிகுதி அரைப்பங்கு யூலைக்கலவரம், கிருஷாந்தி கொலை, இந்திய இராணுவத்தின் படுகொலை, நவாலி தேவாலய குண்டு வீச்சு என்று மறக்க முடியாத வலிகளின் மீள் பதிவாக இருக்கிறது.

நூலுக்கு முகவுரை எழுதுவதற்காக அதைப் படித்த இயக்குநர் சேரன், மனம் கலங்கி தானே ஒரு நூலகத்தை உருவாக்கி, சேரன் நூலகம் என்ற பெயரில் இந்த நூலை வெளியிட்டுள்ளார், சமீபத்தில் ஊடகங்களில் இதுபற்றி நிறைய அறிந்துள்ளோம்.

நூலில் உள்ளவை அத்தனையும் சத்தியமான உண்மைகள், அவை சிறுகதை வடிவமாக தரப்படுகிறது, ஆனால் சிறுகதைகளை அங்கு காணமுடியவில்லை.. சிறுகதை என்று ஆடையிட்டாலும் உண்மை தன்னை மறைக்க விரும்பாது வீரியத்துடன் தரிசனமாகிறது.

நூலின் சிறப்புக்கள் :

எழுதாமலே எடுத்த ஏற்றம்

நூலைத் திறந்தவுடனேயே தலைவர் பிரபாகரனின் படமும், இரண்டு பக்கங்கள் ….. அவருடைய முன்னுரையை எதிர்பார்த்து, எதுவுமே எழுதப்படாத வெற்றுத் தாள்களாக விடப்பட்டிருக்கும்.. அவர் வெளிவரும்போது அந்த முகவுரையை எழுத வேண்டும் என்ற விருப்பம்..

இதுவரை எவருடைய மூளையிலும் உதிக்காத அற்புதமான புதிய சிந்தனை.. அண்ணன் வருவானென்று சிம்மாசனத்தில் இருக்காமல் அதை வெற்றிடமாக வைத்து அதன் கீழ் இருந்து 14 வருடங்கள் ஆட்சி செய்த பரதனின் சகோதர பாசத்தை அந்த இரண்டு பக்கங்களும் எழுதாமலே காட்டிவிடுகின்றன.

” கம்பராமாயணத்தை தீயிட்டு கொழுத்துங்கள்..! ” என்று பேசிய பேரறிஞர் அண்ணாவே பரதனின் இதே கொள்கையை பின்பற்றி தி.மு.க கட்சிக் கூட்டங்களில் போடப்படும் முதல் ஆசனத்தை தந்தை பெரியாருக்காக எப்போதும் வெற்றிடமாக வைத்து, மேடை போட்டார் என்பதை நினைத்தால் இந்தத் தத்துவத்தின் பெருமையும், வலிமையும் புரியும்.

எரிப்போரையும், ஏற்றித் துதிப்போரையும் வேறுபாடின்றி கவரும் இந்த முதல் மரியாதைத் தத்துவம் தமிழால் முடியாது, எழுத்தின்றி வெளியாக நிற்கின்றது, ” சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..” என்ற கவிஞர் வரிகள் துடிக்கின்றன.

” பிரபாகரன் முருகனின் அவதாரம் அவர் கடமை முடிக்காமல் இறக்கமாட்டார் வருவார்..” என்று திருமுருக கிருபானந்தவாரியார் சொன்னதை இயக்குநர் வ. கௌதமன் கோடிட்டுக்காட்டி அந்த இடத்திற்கு மேலும் புது வலு கொடுத்துள்ளார்.

உயிரும் கொடுக்க வந்த சேரன்

புத்தகத்தைப் படித்தபோது, ” நீ யார்..? ” என்று மனச்சாட்சி கேட்டது..

” நான் தமிழன் என்றேன்..”

” இனி அப்படி சொல்லாதே..! ” என்றது.. என்று கூறிய சேரன் ” நான் மரணித்திருக்கலாம்..! ” என்ற தலைப்பில் எழுதிய முகவுரையே புத்தகத்தின் உரைகல்..

படித்த ஒருவர் இறந்திருக்கலாம் என்று கூறுவது கலம்பக இலக்கியம் சார்ந்தது, நந்திக்கலம்பகத்தின் பாடல்களை கேட்பதற்காகவே எதிரிகளின் சதி என்று தெரிந்தும், ஈம விறகில் படுத்து உயிர் விட்ட நந்திவர்மன் தமிழ் இலக்கியத்திற்கு தந்த உயர்வான இடம் அது..

தமிழுக்காக அன்று புகழாகி, புகையான நந்திவர்மனை அறிந்தாரோ இல்லையோ சேரனின் வரிகள்.. அழியாப் புகழ் நந்திக்கலம்பகம் போன்ற புகழை ஆரம்பத்திலேயே நூலுக்குக் கொடுத்துவிடுகிறது.

நாம் அறியாத செய்திகள்..

அன்று அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளாகிய செவ்விந்தியர் அழித்து, எரிக்கப்பட்டு அமெரிக்கா என்ற நாடே சூறையாடப்பட்டது போலவே வன்னியில் நடைபெற்ற வஞ்சகப் போரில் தமீழமும் சூறையாடப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றில் அடுக்கும் வாதங்கள் போல அத்தனை படைப்புக்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அடுக்கிச் செல்கின்றன.

அதிர்ச்சி 01

வவுனியாவில் கைது செய்யப்படுகின்ற இளைஞர்கள் கொன்று, உடல்கள் கீறிக் கிழிக்கப்பட்டு, சிறு நீரகங்கள், கண்கள் போன்றவை களவாடப்படுகின்ற காட்சியை கண்ட பாதிரியாரின் கதை ” ஐயோ..! ” என்று அலற வைக்கிறது..

அதிர்ச்சி 02

நோயாளியான இசைப்பிரியா வவுனியா முகாமிற்கு கொண்டு வரப்பட்ட பின்புதான் பாலியல் கொடுமை செய்த கொல்லப்பட்டாள் என்ற செய்தி, அவள் இறப்பதற்கு முன் தொலைபேசியில் உரையாடிய செய்தி, பாலியல் கொடுமை செய்த சிங்கள மிருகங்களுடன் அவள் கடைசிவரை போராடினாள் என்ற தகவல்.. சமாதானம் பேசப்போன எரிக் சோல்கெய்ம் என்பவன் மீது தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது.

அதிர்ச்சி 03

ஊடகவியலாளன் சத்தியமூர்த்தி போர்க்களத்தில் நின்று உயிர் கொடுத்து வன்னியின் அவலங்களை உலகின் முன் கொண்டுவந்த வீரமும், செத்து மடிந்தாலும் சிரிப்பு குலையாது கிடந்த அவன் ஆளுமையும் .. ” ஐயோ இப்படி ஓர் ஊடகவியலாளனை கொன்றுவிட்டீர்களே பாவிகளே..! ” என்ற அதிர்ச்சி மனமெங்கும் பரவி விறைக்க வைக்கிறது..

அதிர்ச்சி 04

முள்ளுக்கம்பிகாளால் 25 பெற்றோரை மரத்தில் சுற்றிக்கட்டி, பிள்ளைகளை தனியாகப் பிரித்து கொல்ல நின்ற சிங்கள இனவாதத்தின் புகைப்படம்.. ” டே..நீயும் மனிதனா..?” என்று ஐ.நா செயலரான தென்கெரியன் பான் கி மூனைப்பார்த்து நூலாசிரியர் எழுப்பும் போர்க்குரலானது, உலகத்தின் சுவர்களில் மோதிச் சிதறுகிறது.. “அவன் அந்தப் பதவிக்கே தகுதி இல்லாதவன் மனித குலத்தின் துரோகி..! ” என்கிறபோது மனதில் பாலாறு பாய்கிறது..

அதிர்ச்சி 05

ஒதியமலையில் தமிழ் பேசி, அப்பாவிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று, கொன்று நடாத்திய அடாவடித்தனம்.. தென்னமரவாடி ஜனகபுரமாகிய அவலம் யாவும்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளாக இறங்குகின்றன..

இதன் பின் யூலைக்கலவர நெருப்பு, நவாலித்தேவாலயம், கிருஷாந்தி, மோட்டர் சைக்கிளுடன் புதைக்கப்பட்ட சதாசிவ குருக்கள் என்று நாம் முன்னரே அறிந்த சம்பவங்கள் ஆசிரியரின் பார்வையில் புத்துருப் பெற்று வருகின்றன.. இப்படி ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சியாக இருக்கிறது.. பணம் கொடுத்து வாங்கி படித்து உணர வேண்டும்..

நூலின் மீதான பறவைப் பார்வை

சம்பவங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி நோக்கினால் அதன் உரிப்பொருளான உள்ளோட்டம் சிங்கள இனவாதத்தின் சேற்று முடை நாற்றமடிக்கும் வக்கிர “சைக்கோபாட்..!” மனம்தான்.

அல்பிரட் ஹிச்சொக் எழுதிய சைக்கோவில் வரும் ஒரு கொலையாளி அன்று முழு உலகையும் உறைய வைத்தான் ஆனால் சிறீலங்காவில் மில்லியன் கணக்கில் சூழ்ந்து நிற்கும் சைக்கோ சிங்கள இராணுவம், சைக்கோ அரசியல்வாதிகள், சைக்கோ புத்தமதகுருக்கள், சைக்கோ இன வெறி கொண்ட படிப்பறிவு குன்றிய சிங்கள வெகுஜனம், காட்டிக்கொடுக்கும் சைக்கோ தமிழ்க் கூலிகளாகிய ஒட்டுமொத்த சைக்கோக்களையும் ஒரு தீவுக்குள் விட்டு, நாற்புறமும் கடலால் சூழ வைத்து, அந்தச் சிறைக்குள் அப்பாவி தமிழரை சிறை வைத்தால் எப்படி ஒழுகும் இரத்தம்.. அது ஆறாகப் பாய்கிறது. அந்த இரத்த ஆற்றில் சிறு தூரிகையால் தொட்டு வரையப்பட்ட இரத்த ஓவியமமே இந்தப் போரும் வலியும்.

மேலே பருந்து, கீழே நாகம், மறைவில் அம்புடன் குறி வைக்கும் வேடன், தனது குஞ்சுகளுடன் போக வழி தெரியாது மரக்கொப்பில் இருக்கவும் முடியாது பறக்கவும் முடியாது தடுமாறிய புறாவின் அவல நிலையே முட்டைக்குள் கலங்கி அழிகின்ற கருப்போல வன்னிக்குள் கலங்கி அழிகிறது.. மேற்கண்ட சீவகசிந்தாமணி கதையில் புறா தப்பியது, வன்னியிலோ அது குஞ்சுகளுடன் செத்தது.. அந்தோ முட்டைகளைக்கூட சிங்கள நாகம் குடித்தது..

இந்தச் சைக்கோ போரில் ஈடுபட்ட சிறீலங்காவுடன் இந்தியா, நோர்வே, சர்வதேச சமுதாயம், ஐ.நா அனைவருமே ஒன்றாகக் கை கொடுத்தது எப்படி.. இவர்களும் சைக்கோ மிருகங்களா..?

ஆம்.. வேறென்ன..? நூலின் உறுதியான வாதம் அதுதான்.

நாகரிக உலகத்தின் உளவியல் இத்தனை கேவலமானதா..? மனிதன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது…!!

நூலை மூடிக்கொள்கிறேன்…

கண்களை மூடி ஒரு சிந்தனை..

எத்தனை துயரமிருந்தாலும் வாழ்வில் சிறிய நம்பிக்கை வைக்க வேண்டும்.. காரணம் இந்த உலகில் பிரபாகரன் என்று ஒருவனும், அவனோடு போராடிய தம்பியரும், இறந்து மடிந்த ஈழத் தமிழரும், இருந்ததும், இருப்பதும் இந்தப் பூமிதான்..

சேற்றில்தானே செந்தாமரை மலரும்..

அந்த செந்தாமரையில் தானே கலைமகள் உறைகிறாள்..

போரும் வலியும் பாகம் 2 ல் அந்தப் பெருமையை பதிவு செய்ய வேண்டும்..

இந்த பூமித்தாய் பெற்ற புதல்வர்களில் ஒன்றுகூட உருப்படி இல்லை என்பதை வன்னிப்போர் நிறுவிவிட்டது.. ஆனால் அவளுடைய ஒரேயொரு உருப்படியான பிள்ளை மானமுள்ள ஈழத் தமழினம் மட்டுமே என்ற பெருமையை எழுதாவிட்டாலும், நூல் அந்தப் பெருமையை மலர்வித்து நிற்கிறது..

இதுதான் இந்தப் போரும் வலியும் உள்ளத்தில் தரும் ஒரேயொரு ஆனந்தம்..

இது சுதந்திர தமிழ் ஈழம் இருப்பதைவிட நமக்கு பெரிய சுகம்.. தலை நிமிர்வு, தன்மானம்..

நூல் உருவாக்கம், அட்டைப்பட வடிவமைப்பு, வர்ணத் தேர்வு, பைன்டிங் யாவற்றிலும் சேரன் படங்கள் போல செயல் நேர்த்தி தெரிகிறது.

கி.செ.துரை 08.02.2013

Leave a Reply

Your email address will not be published.