முள்ளியவளையில் மாவீரர்களின் எலும்புக்கூடுகளை தோண்டி அகற்றும் படையினர்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால், நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதியில் படைத்தளமொன்றினை அமைக்கும் வகையில், தற்போது எஞ்சிய மாவீரர்களின் கல்லறைகளது எலும்புக் கூட்டுத் தொகுதிகளை அகற்றும் நடவடிக்கையில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த உடன் வன்னியில் இராணுவத்தினர் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதியை இடித்து கல்லறைகள் உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது மாவீரர்களின் எலும்புக்கூடுகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த கல்லறைகள் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், இப்போது இராணுவத்தினர் மண்ணை அகழ்ந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் மனித குலத்தின் மாண்பை காலில் போட்டு மிதிக்கும் ஓர் நடவடிக்கையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கும் நோக்கத்துடனேயே இந்த எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் அகற்றும் வேலைகள் நடக்கின்றன என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் படைத்தரப்பினால் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் பலவும் தற்போது படைத்தரப்பின் இராணுவ தளங்கள் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *