ஒருவழியாக ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை மீட்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் வழிநடத்தலுடன் ஆப்கானில் இயங்கி வந்த நேட்டோ படையினர் அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்குள் புகுந்துள்ளனர்.
இந்நடவடிக்கையின் போது சுமார் 25 கான்டெய்னர்களில் ஆயுதங்கள் உட்பட தமது இராணுவத் தளவாடங்களை இவர்கள் அகற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு இறுதிக்குள் தனது படைகள் அனைத்தையும் வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே இராணுவத்தினரை மீள அழைக்கும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் நேட்டோ படையினரை மீள அழைக்கும் இந்த நிகழ்வில் இராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் கான்டெய்னர்கள் பிலால் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் உடையவை ஆகும்.
பாகிஸ்தான் அரசின் அனுமதியின் பின்னரே இந்த பின்வாங்கும் நடவடிக்கை பாகிஸ்தானினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.
முதலில் இந்த இராணுவத் தளவாடங்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கராச்சி துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. இதன் பின்னர் மிகப் பெரிய போர்க் கப்பல்கள் மூலம் இவை கராச்சியில் இருந்து தமது சொந்த நாடான அமெரிக்காவுக்குத் திரும்பி விடும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த மீட்பு நடவடிக்கையில் இன்னும் ஏராளமான 50ற்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கொண்டு வரப்படலாம் எனவும் கருதப் படுகின்றது.