ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி,
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய சிறிலங்காப் படையினர் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தியது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் சிறிலங்கா அரசுக்கே உள்ளது.
இது அமைதிகாப்புப் படைக்கு படையினரை அனுப்பும் நாடுகளை சார்ந்த விவகாரம். இது அவர்களின் பிரச்சினை. இது அவர்களின் இறையாண்மைக்குட்பட்ட பொறுப்பு. அவர்களின் தேசிய சட்டங்களுக்குட்பட்டது.
அதற்காக இந்த விவகாரத்தில் ஐ.நா அக்கறைப்படவில்லை என்றோ இதன் தொடர்ச்சியைக் கவனிக்காமல் உள்ளதென்றோ அர்த்தமில்லை.
ஆனால் இது அந்த நாட்டின் தேசிய அதிகாரிகளின் நீதிமுறைக்குட்பட்டது.
குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக இனங்காணப்படும் சிறிலங்காப் படையினர் கட்டாயம் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2007 நவம்பரில் ஹெய்டியில் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 950 சிறிலங்காப் படையினரில், 111 படையினரும் 3 அதிகாரிகளும் அந்த நாட்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் சுரண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப்ப்பட்டிருந்தனர்.
சிறிலங்கா அரசினால் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம் அண்மையில் தான் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.