வடகொரியா 3வது அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டது ஐக்கிய நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அணு ஆயுத சோதனை நடந்ததாக கூறப்படும் நேரத்தில் வட கொரியாவின் நிலத்தடியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
CTBTO எனப்படும் “அணு ஆயுத சோதனை தடை அமைப்பு” வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்ததற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், வழக்கத்திற்கு மாறாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனைக்கு, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின், செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுதப் பரவலுக்கு வழி வகுக்கும் எந்தவித நடவடிக்கையையும் வடகொரியா செய்யக் கூடாது என உலக நாடுகளின் வலியுறுத்தலை, புறக்கணிக்கும் விதமாக இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா சபை குறிப்பிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இந்த நடவடிக்கை, சர்வதேச அமைதிக்கும், அணு ஆயுத பரவல் நடவடிக்கைக்கும் பங்கம் விளைவிக்கும் என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஐ.நா சபையும் அதன் உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து உறுதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கண்டனம்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு, கூடுதல் கவனத்துடன் இனி கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளில், வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.