இப்படி ஒரு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதா என்று கேட்டதற்கு, இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனராம். இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல் இலங்கையில் இருந்து வரும் எவரையும் அகதிகளாக பதிவு செய்து ஏற்க வேண்டாம் என்றும் மறுவாழ்வுத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுவது உண்மையா என்பதை தமிழக அரசு உடனடியாக விளக்க வேண்டும். இலங்கையில் சிங்களர்களுக்கு இணையான அரசியல் சம உரிமை தமிழர்களுக்கு தரப்படும் வரை தொடர்ந்து போராடுவேன் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்த தமிழக முதல்வர், அங்கு இன்னமும் தமிழினம் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பாரா என்கிற ஐயம் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. இதனை தமிழக முதல்வர் உடனடியாக விளக்கிட வேண்டும்.
தனது சொந்த நாட்டில் பாதுகாப்புடனும், உரிமையுடனும் வாழ முடியாத ஒரு சூழலில், வேறு ஒரு நாட்டில் அடைக்கலம் தேட எந்த ஒரு மனிதருக்கும் உரிமை உள்ளது என்றே ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான பிரகடனமும், உலக மனித உரிமை பிரகடனமும் கூறுகின்றன. உண்மை இவ்வாறிக்கையில், தங்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வரும் ஈழத் தமிழ் சொந்தங்களை இங்கு வாழ அனுமதிக்காமல் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவது என்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும். இது இலங்கை அரசின் தமிழின அழித்தலுக்கு துணை போகும் நடவடிக்கையாகும். எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு ஈழத் தமிழ் சொந்தங்களை அகதிகளாக பதிவு செய்து இங்கு வாழ அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்