Search

கேணல் கிட்டு: அழகான ஆளுமை —- ச.ச.முத்து

‘ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன’
‘அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்.போராடினான்’
‘போர்க்களத்தில் வீரனாகவும்,பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின்வீச்சு நிறைந்திருந்தது’
‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.’
‘நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்’
‘நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன்.தம்பியாக,தளபதியாக நான் அவனை நேசித்தேன்.’

‘எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன்.இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது’
‘அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப்பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது’
‘அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு சோகநிகழ்வு.அதனை சொற்களால் வார்த்துவிட
முடியாது’1993ம்ஆண்டு ஜனவரி 16ம்நாள் வங்கக்கடலில் கிட்டு வீரகாவியமானபோது தேசியதலைவரால்
விடுக்கப்பட்ட செய்தியில் இருந்த மிகமுக்கியமான வாக்கியங்கள்தான் மேலே உள்ளவை.
தேசியதலைவர் சொல்லி இருப்பதுபோல கிட்டுவின் வரலாறு என்பது சொற்களால் வார்த்து முழுமையாக வெளிக்காட்டிவிட கூடியது அல்ல.
தமிழீழத்தினது மட்டும் அல்லாமல் முழுஉலக தமிழினத்தின் ஆன்மாவாக தேசியதலைவரே விளங்குகிறார்.அவரது ஆன்மாவையே பிழிந்ததாக கிட்டுவின் இழப்பு இருந்திருக்கிறது என்றால்
அவருக்குள் எவ்வளவுதூரம் ஆழமாக அவன் பதியம்;போட்டு இருந்திருக்கிறான்.மனிதமொழியில்
கூறப்பட்டிருந்த உறவுமுறைக்கெல்லாம் அப்பாற்பட்டதான அந்த உறவு எப்படி பிணைந்தது…?
இன்றும்கூட தாண்டிசெல்லவும்,இட்டு நிரப்பவும் முடியாத பெரும் இடைவெளியாகவே அவனின் இடம் இருக்கின்றது.
ஒரு இனத்தின் விடுதலைக்கான களப்பயணத்தில் அவன் வகித்த காலத்தின் பதிவு பாத்திரம் எத்தகையது என்று பார்க்கும்போதுதான் கிட்டுவின் வரலாறு வியப்புடன் விரிகிறது.

அவனது வரலாறுமுழுதும் ஆளுமையின்வீச்சும்,அற்புதமான அறிவுத்தேடலும்,மண்டியிடாத வீரமும்,கட்டுக்குலையாத உறுதியும் நிறைந்தே இருக்கின்றது.
போராட்டத்துக்காக அவன் வந்தபோது இத்தனை ஆளுமை நிறைந்தவனாகவோ இத்தனை
அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவனாக இருந்தான் என்று எந்த தேவதையும் அசரீரி ஒலிக்கவில்லை
அவன் போராட்டத்தின்ஊடாகவே கற்றான்.போராட்டத்தை அவன் செதுக்கிபோது தானும் சேர்ந்தே
சுயமாக செதுக்கப்பட்டான்.அதுவே அவனை வரலாற்றின் உச்சமாக கொண்டும் சென்றது.
அவன் அதுவரை வாழ்ந்திருந்த வாழ்வுக்கும் அவன் விடுதலைப்போராட்டத்துக்கு என்று புறப்பட்டு
அண்ணையிடம் வந்த பின்னர் வாழ்ந்த வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் மிகமிக பெரியது.
நடுத்தரகுடும்பங்களைவிட வசதியானவாழ்வு,எந்நேரமும் இவனில் செல்லம்கொஞ்சும் பாசமுள்ள அம்மா,அன்பான மூத்தசகோதரன் என்றிருந்த குடும்பம் அவனது.சாப்பாடு கொஞ்சம் நேரம்பிந்தியதற்கே தாயுடன் கோபித்து கொள்ளும் இவனே பயிற்சிகளத்தில் 10,20 பேருக்கு
சமைத்துஉணவு பரிமாறுபவனாக தானாக ஏற்று வேலைசெய்யும்போதுதான் இவனின் விடுதலைக்காக எதையும் எந்த வேலையையும் செய்ய தயங்காத குணம் தெரிந்தது.
விடுதலைப்புலிகளின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிமுகாம் 1979ல் மாங்குளம்பண்ணையில் தலைவரின் நேரடிகண்காணிப்பில் ஆரம்பமானபோது யார் சமையல் என்ற தலைவரின் கேள்விக்கு பதிலாக தானே முன்வந்து அந்தவேலையை செய்ய ஆரம்பித்தில் இருந்து இறுதிநேரத்தில் வங்ககடலில் நின்றதுவரை அவன் எந்தவேலையையும் விடுதலைக்காக செய்வதில் பின்னின்றது இல்லை.
79ல் மட்டும் அல்லாமல் 1983லும் இவனே பயிற்சிமுகாம் சமையல்.83ல் கிட்டு அமைப்பின் ஒரு
முக்கிய உறுப்பினன்.தலைவருக்கு அடுத்த வரிசையில் ஐந்துபேரில் ஒருவனாக இருந்தவன்.
அப்படி இருந்தும் 1983ல் புதியவர்களான பொட்டு,விக்ரர்,லிங்கம் போன்றவர்களுக்கான பயிற்சிமுகாமில் யார் சமைப்பது என்ற கேள்விக்கும் தானே முன்வந்து சமையல்பகுதியின்
பொறுப்பை ஏற்கிறான்.பயிற்சிக்கு வந்த புதியஉறுப்பினர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அங்கு கிட்டு சமையல்வேலையில் நின்றதை பார்க்க.அவர்கள் அந்த பயிற்சியில் கற்ற எல்லாவற்றையும்விட கிட்டுவை பார்த்து கற்றுக்கொண்டது ‘விடுதலைக்காக என்ன வேலை என்றாலும் அதை முழுமனதுடன் செய்யவேண்டும்’ என்பதாகும்.
விடுதலைக்கான களத்தில்,சுதந்திரபோராட்ட அமைப்பில் என்ன வேலை என்றாலும் அது விடுதலைக்கானதுதான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.விடுதலைக்கான களவேலையில் இன்ன வேலைதான் செய்வேன் என்று முடிவெடுத்து வருபவன் போராளி அல்ல என்பது இவனின் கருத்தாக இருந்தது.அதற்காக எல்லா வேலைகளையும் செய்தான்.முழுமனதுடன்.
விடுதலைக்காக என்னவெல்லாம் செய்யமுடிமோ அவ்வளவற்றையும் தனது வாழ்நாள் முழுதும் தேடிதேடி கொண்டே இருந்தவன் கிட்டு.
81,82களில் தலைவருடன்போய் தமிழகத்தில் நிற்கவேண்டிய ஒரு தேவைஒன்று ஏற்பட்டபோது
அதற்கும் போனான்.அங்கும்போய் சும்மா நிற்காமல் அந்த நாட்களையும் விடுதலைக்கான ஏதாவது ஒன்றுக்கு பயன்செய்ய விரும்பினான்.என்றாவது ஒருநாள் விடுதலைப்போராட்டம் வளர்ச்சி அடையும்போது அதற்கு தேவையான புகைப்படநுணுக்கங்களையும்,புதிய வர்ண அச்சு முறையாக அப்போது இருந்த லித்தோ அச்சுமுறையையும் தலைவரின் அனுமதியுடன் மதுரையில் படித்தான்.அடுத்தவேளை சாப்பாட்டிற்கே சிரமமான அந்த மதுரைநாட்களில் இதனை
படிக்கவேண்டும் என்றும் அதனை விடுதலைப்போராட்டத்துக்கு என்றாவதுஒருநாள் பாவிக்க முடியும் என்றும் இவன் சிந்தித்தது இன்றும் அதிசமாகவே இருக்கிறது.
இந்த தேடலும்,தமிழீழவிடுதலையை பெற்றுவிடுவதற்கு தேவையான அனைத்தையும் தேடி தேடி எமது இனத்துக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற துடிப்பும்தான் கிட்டுவின் மிகப்பெரிய வேலையாக காலகாலமாக இருந்திருக்கிறது.
இந்த தேடலானது அவன் அமைப்பில் இணைந்த 1979ல் மாங்குளம்பண்ணையில் பழைய .38ரவைகளுக்கு மீள்பாவிப்பு
க்கு மருந்திடும் நுணுக்கம் கற்றுக்கொண்டதுமுதல் அவனின் இறுதிநாட்களில் 90களின் ஆரம்பத்தில் விடுதலைக்கான
அங்கீகாரத்துக்கான ஒரு பெரிய முயற்சியில் தென்அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நாட்டில் நின்றபோது அந்த ஊன்று கோலுடன் அலைந்து அந்த மக்களின் இசைநுணுக்கமும் சித்திரங்களும் பற்றியும் தேடவைத்தது.
இந்த உணர்வுதான் அவனை எப்போதும் முன்னோக்கி சிந்திக்கவைத்தது.ஒரு விடுதலைப்போராட்டத்தின் மிகமுக்கியமான கட்டமாக நிலமீட்பு அமைகிறது.அந்த வகையில்
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின்னர் தமிழர்களின் நிலப்பகுதி ஒன்று எந்தவித இடையீடம்இன்றி தமிழர்களால் ஆளுப்படும்நிலையை ஏற்படுத்தியவன் அவன்.1985 ஏப்ரல்மாதம் யாழ் காவல்நிலையம்மீதான தாக்குதலை கிட்டு தலையேற்று நடாத்தி முடித்த கையோடு அதன்பின் வந்த நாட்களில் யாழ்மண்ணில் சிங்களபடைகளின் குறுக்கும் நெடுக்குமான ரோந்துகள் இல்லாமல் போகிறது.ராணுவம் முகாம்களுக்குள் முடங்கிபோனது.மீட்கப்பட்ட முதல் தமிழ்மண்ணை கிட்டு தமிழர்வரலாற்றில் காட்டுகிறான்.
இந்த நிகழ்வானது மிகவும் பாரிய அளவில் விடுதலைப்போராளிகளுக்கு மனஉறுதியையும்
தமிழ்மக்களுக்கு விடுதலைப்போராட்;டத்தின்மீது உரம்மிக்க நம்பிக்கையையும் கொடுக்கிறது.
மிகமிக குறைந்த அளவிலான போராளிகளையும் குறைந்த சூட்டுதிறன்கொண்ட ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு இதனை சாதித்ததில் கிட்டு என்ற தளபதியின் பங்கு பாரியது.
யாழ்மாவட்;டத்தில் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்து தினமும் வெளியேற முயற்சித்த படையினரை மறித்து திரும்பஅனுப்பும் களத்தில் எங்கெங்கும் கிட்டு நின்றதானது போராளிகளுக்கு பலமடங்கு வீரியத்தை தந்தது.
யாழ்மண் விடுதலைப்போராளிகள் வசம் வந்துவிட்டதுடன் கிட்டு திருப்தி கொள்ளவில்லை.
எந்த ராணுவெற்றியையும் அரசியல்ஆக்குவதன் முலமே எமது மக்களுக்கான விழிப்புணர்வை
கொண்டுவரலாம் என்பதால் ராணுவரோந்துகள் இல்லாத யாழ்மண்ணில் மக்கள்நீதி மன்றங்களையும்,இணக்கசபைகளையும்,சுயதொழில் ஊக்குவிப்புகளையும் இன்னும்; பல கட்டமைப்புகளை நிறுவினான்.
அரசியல்வகுப்புகளையும்,தெருநாடகங்களையும் நடாத்தி எமது மக்களுக்குள் விடுதலை கனலை
ஏற்றுவதில் உழைத்தவன் அவன்.
யாழ்மாவட்டத்தில் முகாம்களுக்குள் ராணுவம் அடைபட்டதை வைத்தே ஒரு பெரிய ராசதந்திர
நகர்வையும் விடுதலைப்போராட்;டம்பற்றிய ஒரு பெருமிதமான பார்வையையும் கொடுப்பதற்காக
அருணாவையும் காமினியையும் மீட்டு சிங்களதேசத்துடன் ஒரு கைதிகள் பரிமாற்றத்தை அழகாக செய்துகாட்டிய ராசதந்திரமேதை அவன்.
எல்லா ஆளுமைகளும் அவனுக்குள் ஒரு இரவில் வந்து குடியேறியவை அல்ல.அவன் அதற்காக நடாத்திய தேடல்கள் மிகஅதிகம்.அதனால்தான் ஒரு ஆற்றல்மிக்க போர்வீரனாக இருந்த அவனால் ஒரு வரலாற்றுத்திருப்பத்தை ஏற்படுத்திய தளபதியாகவும் மாற முடிந்தது.
அதனால்தான் அவனால் ஒரு சிறந்த ஓவியனாகவும்,மிகச்சிறந்த புகைப்படம் பிடிப்பவனாகவும்,
ஊடகங்களை நடாத்தும் தனித்திறமை மிக்கவனாகவும்,மிகமிக இலகுவாக பயிற்சிகளில்
விளக்கம்தரக்கூடிய பயிற்சியாளனாக என்று அத்தனை ஆளுமைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அவன் விடுதலைக்காகவே இவை அனைத்தையும் செய்தான்.ஒரு இரவில் அவன் வீட்டை விட்டு வெளியேறிய 1978ல் இருந்து அவன் வீரச்சாவடைந்த 1993வரை தாயகத்தின்பரப்பு எங்கும்,
அதன் பின்னர் தமிழகத்திலும்,இந்தியாவிலும்,அதற்கு பின்னர் இங்கிலாந்திலும் அங்கிருந்து
புறப்பட்டு ஐரோப்பியநாடெங்கும் திரிந்தபோதிலும் ஒரு பொழுதில் விடுதலைக்காக உலகின் இன்னொரு முனையில் மெக்சிகோவில் போய்நின்றபோதிலும் அவன் விடுதலைக்காகவே
வாழ்ந்தான்-போரிட்டான்-அலைந்தான்-கற்றான்-பயிற்றுவித்தான் எல்லாமே.
இறுதியில் விடுதலையின்மீது கொண்ட அதிஉச்சமான விருப்பை வெளிக்காட்டவும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் விடுதலைமீதான இலட்சியஉறுதியை சொல்லவும் தன்னை
தீக்குள் ஜோதி ஆக்கினான்.
அவனதும் அவனுடன் வங்ககடலில் ஆகுதி ஆகிய ஒன்பது மாவீரர்களின் நினைவு என்றென்றும்
அந்த அலையின் மீது மிதந்தபடியே இருக்கும்.எங்கள் கரையையும் அவை வந்துவந்து தொட்டுபோகும்.எங்கள் நினைவுகளை போலவே



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *