எரிகற்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க ரஷ்யாவின் புதிய திட்டம்

ரஷ்யா, எரிகற்களின் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டம்(anti-meteorite shield) ஒன்றை நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.

இத்திட்டத்துக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் விஞ்ஞானக் கழகம் மற்றும் வானியல் கல்வி மையத் திணைக்களத்தின் தலைவரான லிடியா ரைகோல்வா எனும் பெண்மணி கருத்துரைக்கையில், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் எரிகற்களின் பாதையைத் திருத்தமாகக் கண்காணிப்பதற்குப் பூமியின் தரையில் அமைக்கப்பட்டுள்ள மிகுந்த பார்வை வலுவுடைய தொலைக் காட்டிகளை விட விண்ணில் இத்தொலைக் காட்டிகளை அமைக்கும் ஒரு தளத்தை நிர்மாணிப்பதே அவசியமாகின்றது என்றார்.

இவர் மேலும் கூறுகையில் இந்த செயற்திட்டம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக் கழகமான ரொஸ்கொஸ்மொஸ் (Roscosmos) இனாலும் துணைப் பிரதமர் டிமித்ரி ரொகோஷின் ஆலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் வெள்ளிக்கிழமை ரஷ்யாவைத் தாக்கிய எரிகல்லின் சில சிதைந்த பாகங்களை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த எரிகல் 7 மிகப்பெரிய துண்டுகளாக உடைந்து செபார்க்குல் ஏரியில் வீழ்ந்ததாக இனங் காணப்பட்டுள்ளது.

எரிகல் தாக்கிய பகுதியை உலக நாடுகளின் தலைவர்கள் வந்து பார்வையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட செல்யாபின்ஸ்க் நகரின் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.