தென் ஆப்ரிக்காவின் பிரபல ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் காதலியை கொலை செய்த வழக்கில் சிக்கினார்.
மாற்றுத்திறனாளி வீரரான இவர் செயற்கை கால்களுடன் ஓடி ஒலிம்பிக், பாரலிம்பிக் உட்பட பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தார்.
இவர், காதலர் தினமான கடந்த 14ம் திகதியன்று அதிகாலை பிரிட்டோரியாவில் உள்ள தனது சொகுசு பங்களாவில் காதலி ரீவா ஸ்டீன்காம்பை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், திருடன் என்று நினைத்து தவறுதலாக சுட்டு விட்டதாக நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் பிணை கேட்டு அவரது சார்பில் பிரிட்டோரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பு சட்டத்தரணி, பிஸ்டோரியஸ் வேண்டுமென்றே ரீவாவை சுட்டுக்கொன்றதாக வாதிட்டார்.
4 நாட்கள் நடந்த விசாரணை முடிவில் பிஸ்டோரியசுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது. ரூ.61 லட்சத்திற்கான சொந்த உத்தரவாதத்தை கொடுத்து விட்டு பிணை பெற்று கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கு விசாரணை யூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.