கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!-

சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி நீதிமன்றம் சென்றதற்காக மிக அநாகரீகமான வார்த்தைகளால் இராணுவ அதிகாரிகள் தம்மை திட்டித் தீர்ப்பதாக தெரிவித்துள்ள கேப்பாபுலவு மக்கள், தாம் இராணுவ முகாமொன்றுக்குள் வாழ்வதுபோன்ற உணர்வுடனயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த இடத்திலேயே மக்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதுடன், மாற்றுக் காணி வழங்கல் என்ற பெயரில் அந்த இடத்திலேயே கால் ஏக்கர் வீதம் காணி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இரகசிய மான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தொழில் வாய்ப்பின்மை மற்றும் அடிப்படை வசதிகள் இன்மையினால் மக்கள் மிக நெருக்கடிக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று குறித்த பகுதிக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரிடமே மக்கள் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனர்.

இதன்போது மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,

எங்களுடைய சொந்த இடங்களில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆககுறைந்தது 2 ஏக்கர் நிலம் உள்ளது. இப்போது கால் ஏக்கர் நிலம் தருகின்றார்கள். அதில் என்ன செய்ய முடியும்?

சாதாரணமாக வீட்டுத்தோட்டம் செய்வதென்றால் கூட குடிதண்ணீரே இல்லாத இடத்தில் எப்படி விவசாயத்திற்கான நீரை பெறுவது? அதைவிட பெரும்பாலான மக்கள் கடற்றொழிலை தமது அடிப்படை வாழ்வாதார தொழிலாக கொண்ட மக்கள், கடலே இல்லாத இடத்தில் எப்படி கடற்றொழில் செய்ய முடியும்? எனவே மக்கள் தங்களுடைய இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி நீதிமன்றத்திற்குச் சென்றால் இராணுவ அதிகாரி மக்களை அழைத்து மிக அநாகரீகமான வார்த்தைகளால் திட்டித்தீர்க்கிறார்.

மேலும் வழக்கு போடுகிறீர்கள் காணிகளின் உறுதிகள் எங்கே கொண்டு வாருங்கள் என்றும் கேட்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும் என மக்கள் கேட்கிறார்கள். அதற்கும் மேல் யாராவது சந்திக்க வந்தால் அவர்கள் வெளியே போனவுடன் இங்கே வந்து விடுகிறார்கள். யார் வந்தார்கள்? என்ன சொன்னீர்கள்? என எல்லாம் அவர்களுக்குச் சொல்லவேண்டும்.

அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள் என்று கிராமசேவகரிடம் கேட்டால் உடனே இராணுவத்திடம் கேட்கச் சொல்கிறார்கள். நீதிமன்றத்திற்குப் போனதிலிருந்து எதைக் கேட்டாலும் மிக அநாகரிகமான வார்த்தைகளை பேசிக் கொண்டு திரியும் இராணுவத்திடம் வாய் திறந்து பேச முடியவில்லை எம்மால்.

சரி செந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களுடைய பெருந்தொகையான கால்நடைகளையாவது தாருங்கள் என்று கேட்டால் அதையும் தருகிறார்கள் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து இராணுவம் பால் எடுக்கிறது. இது என்ன நியாயம் என்று எமக்கு புரியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் அங்கு சென்றிருந்த சமயம் அங்கு வந்த கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் மக்களுக்கு ஒரு குறையும் இல்லை, சும்மா வந்து இப்படி பேச வேண்டாம் என்று கூச்சலிட்டார்.

ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில் மக்களிடம் கூறியபோது, மக்கள் கடுமையாக அவரை திட்டித் தீர்த்தனர்.

இதேவேளை சந்திப்பை முடித்துக் கொண்டு த.தே.முன்னணியினர் திரும்பிய பின்னர் அவர்களுடன் பேசியவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரும் அச்சுறுத்தும் தொனியில் நடந்து கொண்டதாக மக்கள் தமக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருப்பதாகவும் இது ஏற்றுக் கொள்ள முடியாத அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.