மாலி நாட்டில் பிரான்ஸ் தலைமையிலான படைக்கும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த மோதலில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
மாலி நாட்டில் அரசை எதிர்த்து இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் கிளர்ச்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, மாலியின் வடக்குப் பகுதியில் கிளர்ச்சி தீவிரமாக உள்ளது. மாலி படையினரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. எனவே, அவர்களுக்கு உதவ பிரான்ஸ் தலைமையிலான படைகள் அங்கு சென்றுள்ளன.
மாலி நாட்டின் அருகிலுள்ள சாட் என்ற சிறிய நாடும் தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. வடக்கு மாலியில் மலைகள் நிறைந்த இபோகாஸ் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், சாட் ராணுத்தினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை சண்டை நடைபெற்றது.
இந்த மோதலில் கிளர்ச்சியாளர்கள் 65 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தின் தரப்பில் ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இந்த முறைதான். இது சாட் ராணுவத்துக்கு
பேரிழப்பாக கருதப்படுகிறது.
சாட் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கிளர்ச்சியாளர்களின் ஐந்து வாகனங்களை சாட் ராணுவம் தாக்கி அழித்து. மேலும், கிளர்ச்சியாளர்கள் 65 பேர் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 13 பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் காயமடைந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்
தினம், இனவாத குழுவான டுவாரெக் படைகளை குறிவைத்து, கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகள் நிரப்பிய இரண்டு கார்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதேபோல, பிரெஞ்ச்-சாட் படைகளுக்கான முகாம் அருகே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு
வெடித்ததில் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
பிரெஞ்ச் படைகளுக்கு உதவ அமெரிக்கா ஆளில்லா விமானங்களையும், படைகளையும் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்திருக்கிறது.